சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவியிலிருந்து விலகுமாறு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலங்களும், கற்குவாரிகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு இருக்கின்றன.
அமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தி, குவாரியில் அனுமதிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு கற்களை வெட்டி எடுத்துள்ளார் என வருமான வரித்துறை கண்டுபிடித்திருக்கிறது.
இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது, தனக்கும் – தன் மனைவிக்கும் 78 ஏக்கர் நிலங்கள் இருப்பதாக தனது வேட்புமனுவில் கூறியுள்ள விஜயபாஸ்கர், 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது 139 ஏக்கருக்கு மேல் நிலங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக கற்குவாரிகளை வெட்டியெடுத்துவிட்டு 2016 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவில் தனக்கும், தன் மனைவிக்கும் 9 கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாக தேர்தல் ஆணையகத்திற்கு கணக்குக் காட்டியிருக்கிறார்.
இந்த நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உடனடியாக விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

