சிக்கிம் எல்லையில் பதற்றம்: இந்தியாவுக்கு சீனா மீண்டும் மிரட்டல்

204 0

டோக்லாமில் படைகளை உடனே திரும்பப்பெற உறுதியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று இந்தியாவுக்கு, சீனா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தியா, பூடான், சீனா நாடுகளின் முச்சந்திப்பில் சிக்கிம் எல்லையில் டோக்லாம் என்னும் பகுதி அமைந்து உள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு இங்கு சாலை அமைக்கும் பணியில் சீன ராணுவம் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவம் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த பகுதியில் இந்தியா அமைத்திருந்த 2 பதுங்கு குழிகளை சீன ராணுவம் அகற்றியது.

இதையடுத்து, டோக்லாமில் ராணுவத்தை இந்தியா குவித்தது. தனது எல்லையைத்தான் இந்திய ராணுவம் ஆக்கிரமித்து இருப்பதாக கூறி சீனாவும் இங்கு படைகளை குவித்து இருக்கிறது. இதனால் இங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் பிரிக்ஸ் (பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பு பீஜிங் நகரில் நடந்தது. 2 நாள் நடந்த இந்த கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் அஜித் தோவலும், சீனாவை சேர்ந்த யாங் ஜிய்ச்சியும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு அப்பாற்பட்டு, இருவரும் இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகளாக செயல்பட்டு சிக்கிம் எல்லையில் நிலவும் போர்பதற்றத்தை தணிப்பது குறித்து பேசுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒருவாரத்துக்கும் மேலாகியும் இருவரும் என்ன பேசினார்கள் என்பது பற்றி வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேசியது குறித்து சீனா வெளியுறவு அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டது.

அதில், இந்தியாவை மிரட்டும் விதமாக, “இந்திய சிறப்பு பிரதிநிதியை தனிப்பட்ட முறையில் சந்தித்தபோது சீன பிரதிநிதி, டோக்லாம் சீன எல்லைக்குள் அமைந்த பகுதி என்பதை தெரிவித்தார். சர்வதேச சட்டவிதிகளின்படி சீனாவின் இறையாண்மைக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும் என்றும் இங்கு அத்துமீறி இந்தியாதான் நுழைந்து இருக்கிறது, எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண காரணங்கள் எதையும் கூறாமல் தனது படைகளை திரும்ப பெறுவதற்கு இந்தியா உறுதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டும் எனவும் வற்புறுத்தினார்” என்று கூறப்பட்டு இருந்தது.

டோக்லாம் பகுதியில் அமைதி ஏற்படவேண்டும் என்றால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பாக ஒரே நேரத்தில் இருநாடுகளின் படைகளும் முதலில் அங்கிருந்து திரும்பப் பெறப்படவேண்டும் என்று கடந்த மாதம் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் உறுதிபட கூறி இருந்தார்.

இந்த நிலையில் சீன வெளியுறவு அமைச்சகம் தனது முந்தைய நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருப்பதால் சிக்கிம் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது.

Leave a comment