கடற்கரையில் மக்கள் கூட்டத்துக்குள் இறங்கிய குட்டி விமானம்: சிறுமி உள்பட 2 பேர் பலி

220 0

போர்சுக்கல் தலைநகரம் லிஸ்பனில் கெபாரிகா என்ற கடற்கரையில் மக்கள் கூட்டத்துக்குள் கூட்டி விமானம் ஒன்று தரை இறங்கியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

போர்சுக்கல் தலைநகரம் லிஸ்பனில் கெபாரிகா என்ற கடற்கரை சுற்றுலா தளம் உள்ளது. இங்கு மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி பொழுது போக்குவது வழக்கம்.அதே போல் நேற்று மாலை ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கடற்கரையில் கூடி இருந்தனர்.அப்போது வானில் பறந்து கொண்டு இருந்த குட்டி விமானம் ஒன்று கடற்கரையை நோக்கி தாழ்வாக பறந்து வந்தது.

அந்த விமானம் மீண்டும் மேல் நோக்கி பறந்து செல்லும் என எதிர்பார்த்து மக்கள் அதை வேடிக்கை பார்த்தனர். ஆனால், விமானம் மேல் எழுந்து செல்லவில்லை. கூட்டத்துக்கு மத்தியில் தரை இறங்க முயற்சித்தது.அப்போதுதான் விபரீதத்தை உணர்ந்த மக்கள் அலறியடித்து ஓடினார்கள். பலர் கடலுக்குள் குதித்தனர்.

இறுதியில் விமானம் கடற்கரை மணலில் தரை இறங்கியது. விமானத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், விமானம் மோதி 8 வயது குழந்தையும், 50 வயது மதிக்கத்தக்க ஆணும் உயிர் இழந்தனர். சிலருக்கு காயம் ஏற்பட்டது.விமானத்தில் 2 பேர் இருந்தனர். அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர். விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதால் வேறு வழியில்லாமல் கடற்கரையில் தரை இறக்கியதாக அவர்கள் கூறினார்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a comment