வித்தியா கொலை வழக்கு; குறுக்கு விசாரணையின் போது அதிரடி கேள்வி

215 0
வித்தியாவின் கொலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த காரணத்தினால் குற்றவாளிகளாக யாரையாவது காட்ட வேண்டிய தேவை இருந்ததால் குற்றச் செயல்களில் சம்பந்தப்படாதவர்களையும் எதிரிகளாக காட்டியுள்ளீர்கள் என எதிரி தரப்பு சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன குறுக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வு அதிகாரி நிசாந்த சில்வாவிடம் கேள்வியெழுப்பினார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு நேற்று யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தில் நீதாய மன்ற விசாரணையாக நடைபெற்ற போது எதிரிகள் சார்பில் சட்டத்தரணி இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
குறுக்கு விசாரணையின் போது பொலிஸ் குற்றப்புலனாய்வு அதிகாரி நிசாந்த சில்வா சடலம் காணப்பட்ட இடத்தில் குற்றம் நடைபெற்றதற்கான சான்றுகள் இல்லையென்றும்,
அரச படைகள் வித்தியாவை கொலை செய்ததாக திசை திருப்பும் வகையில் இக்குற்றம் செய்யப்பட்டிருப்பதாக தான் சந்தேகித்தாக விசாரணையின் போது நிசாந்த சில்வா சாட்சியமளித்திருந்தார்.
இவ்வாறு சாட்சியமளித்ததற்கான காரணமாக குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்து 2 கிலோமீற்றர் தூரத்தில் கடற்படை முகாம் அமைந்திருந்த காரணத்தால் தான் இவ்வாறு சாட்சியமளித்தாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரச படைகள் ஆலடிச் சந்தியூடாகவே பயணங்களை செய்கின்றமையும் இவ்வாறான திசை திருப்பலுக்கு காரணமாக இருந்திருக்கலாமென்றும் தான் சந்தேகித்தாக சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட 9 பேரிடம் இருந்தும் பலாத்கார முறையில் சூழ்ச்சியான முறையில் வாக்குமூலம் பெற்றுள்ளீர்கள் என குறுக்கு விசாரணை செய்த சட்டத்தரணி மகிந்த ஜெயவர்தனாவால் நிசாந்த சில்வாவிடம் கேள்வியெழுப்ப பட்டபோது நிசாந்த சில்வா இதனையும் மறுத்துள்ளார்.
வித்தியாவின் கண்ணாடி புங்குடுதீவில் ஆறாம் எதிரியின் எரிந்த வீட்டில் இருந்து சொப்பிங் பை மற்றும் துணியினால் சுற்றப்பட்ட நிலையில் எவ்வாறு எரியாத நிலையில் மீட்டுள்ளீர்கள் என சட்டத்தரணியின் குறுக்கு விசாரணை கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது கண்ணாடி அதிர்ஸ்டவசமாக எரியவில்லை என குற்றப்புலனாய்வு அதிகாரி நிசாந்த சில்வா சிவாரணையில் பதில் அளித்தார்.
எதிரிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆறுமுகம் கேதீஸ்வரன் நிசாந்த சில்வாவிடம் குறுக்கு விசாரணையின் போது தான் சந்தேக நபர்கள் சார்பில் சொல்கின்றேன் நீங்கள் புங்குடுதீவில் ஆறாம் எதிரியின் வீடு எரிந்த பிறகு கண்ணாடி ஒன்றை வைத்து எடுத்துள்ளீர்கள் என்று நிசாந்த சில்வாவை நோக்கி கூறினார்.
இதனையும் நிசாந்த சில்வா மறுதலித்து வாக்கு மூலம் அளித்துள்ளார்.
மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் சீவல் தொழிலாளி நடராசா புவனேஸ்வரனின் சாட்சியங்களை ஆதாரமாக வைத்து விசாரணைகளை ஆரம்பித்தமை மற்றும் நடராசா புவனேஸ்வரனை கைது செய்யாமல் விட்டமையானது சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்யாமல் விடுவதற்கு சட்டத்தில் இடமில்லை குறுக்கு விசாரணையின் போது சிரேஸ்ட சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தனா தெரிவித்தார்.
நடராசா புவனேஸ்வரன், கள் விற்பனை செய்பவர் அவரிடம் எல்லோரும் குடிப்பதற்காக செல்கின்றார்கள் விடயத்தை காதல் விவகாரம் என்று  நம்பிய காரணத்தினால் குற்றத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகம்  குற்றப்புலனாய்வு அதிகாரிக்கு வராத காரணத்தால் அவரை கைது செய்யவில்லை நிசாந்த சில்வா சாட்சியத்தின் போது பதில் அளித்தார்.
நேற்று காலை 9.15 மணி தொடக்கம் மாலை 4.45 மணிவரை குற்றப்புலனாய்வு அதிகாரி நிசாந்த சில்வாவின் சாட்சியம் மட்டுமே பதிவு செய்யப்பட்டது.

Leave a comment