சிக்கிம் மாநில எல்லையை ஒட்டிய டோக்லாம் பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவிடம் தெளிவாகக் கூறிவிட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் கடந்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜீச்சியை தனியாக சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் இந்த சந்திப்பு தொடர்பான பிடிஐ செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகம் அனுப்பிய பதிலில் கூறியிருப்பதாவது:
பெய்ஜிங் வந்திருந்த அஜித் தோவல் யாங் ஜீச்சியை சந்தித்துப் பேசினார். இருவரும் இருதரப்பு உறவு மற்றும் டோக்லாம் பிரச்சினை குறித்து விவாதித்தனர். அப்போது, டோக்லாம் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வேண்டுமானால், அப்பகுதியிலிருந்து இந்திய ராணுவத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அஜித் தோவலிடம் ஜீச்சி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
மேலும் சீனாவின் இறையான்மை, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச நாடுகளுக்கிடையிலான உறவின் அடிப்படை விதிகள் ஆகியவற்றுக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோல, எல்லை பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்க வேண்டுமானால், இரு நாட்டு ராணுவமும் டோக்லாம் பகுதியிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் கடந்த மாதம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

