இரு அணிகளும் விரைவில் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்போம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

8280 0

இரு அணிகளிலும் உள்ள ஒரு சிலர் தான் குழப்பி வருகிறார்கள். கண்டிப்பாக விரைவில் இரு அணிகளும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆசியுடன் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார். குடிமராமத்து பணிகள் மூலம் தமிழகத்தில் உள்ள குளங்கள், ஏரிகள், அணைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பொது மக்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அவர் பதவி ஏற்ற நாளில் இருந்து இதுவரை 2 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

அதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் சொந்த தொகுதிக்கே சென்று குளத்தை பார்வையிட முடிவு செய்தார். அங்கு சென்றால் மு.க.ஸ்டாலின் என்ன சொல்லுவார் என்பது அனைவருக்கும் தெரியும்.

தி.மு.க. ஆட்சியில் இருந்த போதும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவையில் இருந்த போதும் ஏன் அவர்கள் குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது முதல்-அமைச்சர் செய்து வரும் திட்டப்பணிகளை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சி தலைவர் எப்படியாவது ஆட்சியை கலைத்து விட்டு குறுக்குவழியில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று நினைத்து செயல்பட்டு வருகிறார். அது எப்போதுமே முடியாது. மக்களும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோரை நான் சகோதரர்களாக தான் பார்க்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கோவையில் நடந்த கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க காலம் கடத்தி வந்ததாக கூறப்பட்டது தவறு. எந்த அதிகாரிகளும் அப்படி செய்யவில்லை.இரு அணிகளிலும் உள்ள ஒரு சிலர் தான் குழப்பி வருகிறார்கள். கண்டிப்பாக விரைவில் இரு அணிகளும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.

கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இந்த பணி முடிந்ததும் எந்த இடத்தில் வழித்தடம் அமைக்கலாம் என்று ஆய்வு செய்யப்படும். அதன்பின்னர் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment