சிதம்பரம், சீர்காழி, நாகை உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோலிய மண்டல திட்டம் குறித்து மக்கள் கருத்தறியும் பயணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கொள்ள உள்ளதாக திருமாவளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பழங்குடியினர் வாழ்வுரிமை மாநாடு வில்லியனூரில் நடைபெற்றது.புதுவை மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களை தேர்வு செய்து மத்திய, மாநில அரசு பெட்ரோலிய மண்டலமாக அறிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.புதுவையில் பாகூர் பகுதியிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
இதை எதிர்த்து வருகிற 7 மற்றும் 8-ந் தேதிகளில் சிதம்பரம், சீர்காழி, நாகை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கருத்தறியும் பயணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கொள்ள உள்ளது. அதனை தொடர்ந்து அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும்.
நீட் தேர்வில் வியாபாரம் போன்று மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. நீட் தேர்வுக்கு விலக்குகோரி தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். பழங்குடியினருக்கு தமிழக மற்றும் புதுவையில் சாதி சான்றிதழ் வாங்குவது மிகவும் கடினமாக உள்ளது. இரு மாநில அரசுகளும் அதனை எளிதாக்க வேண்டும். இதனால் கல்வி, வேலை வாய்ப்பில் சலுகை பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.
மத்திய அரசும் பழங்குடியினருக்கு ஒதுக்கும் நிதியை 30 ஆயிரம் கோடி குறைத்து வஞ்சித்து உள்ளது.டாக்டர் அப்துல் கலாம் எம்மதமும் சம்மதம் என்ற எண்ணத்தில் வாழ்ந்தவர் தற்போது ஒரு மதத்திற்கு சார்பானவர் என்ற போக்கு அவரை கொச்சைப்படுத்தும் செயல். அதனால் தான் அவரது குடும்பத்தினர் குரான் மற்றும் பைபிளை வைத்திருக்கலாம். ஆனால் அதை மத்திய உளவுத்துறை விசாரணை செய்வதை கண்டிக்கிறோம். இச்சர்ச்சைக்கு தீர்வுகாண உடனடியாக பகவத் கீதையை அகற்ற வேண்டும்.
சாதிக்கு அப்பாற்பட்ட தலைவர் யாரும் இல்லை என்று கமல் கூறிய கருத்தை வரவேற்கின்றேன். தமிழக அரசுக்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் நெருக்கடி அளிக்கிறது. மத்திய அரசு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமிழக அரசை அச்சுறுத்தி வருகிறது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

