சிறிலங்காவில் மறைமுகமாக நடந்தேறும் சித்திரவதைகளை அம்பலப்படுத்துகிறார் பிரான்சிஸ் ஹரிசன்

8227 0

அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பிரான்சிஸ் ஹரிசன் பணியாற்றி வருகிறார். இவர் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக நூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கை தொடர்பாக பிரான்சிஸ் ஹரிசன்  The Diplomat ஊடகத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

கேள்வி: அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான நிகழ்ச்சித் திட்டத்தால் அண்மையில் புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் என்ன?

பதில்: சிறிலங்காவில் 2016 தொடக்கம் 2017 வரையான காலப்பகுதியிலும் வெள்ளைவான் கடத்தல்கள், சட்ட ரீதியற்ற தடுப்புக்கள், சித்திரவதைகள் போன்றன தொடர்ந்துள்ளன. சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினரின் ஒரு குழுவினர் ஆட்களைக் கடத்துகின்றனர். பிறிதொரு குழுவினர் சித்திரவதைகளை மேற்கொள்கின்றனர். மூன்றாவது குழுவினர் கடத்தப்பட்டவர்களை கப்பம் வாங்கிய பின் விடுவிக்கின்றனர். பலவந்தமாகக் கடத்தப்படும் தமிழர்கள் இதற்கென சிறப்பாக அமைக்கப்படும் சிறைக்கூடுகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சிறிலங்கா பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் சித்திரவதைகளில் ஈடுபடுகின்றனர். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது இவ்வாறு தடுத்து வைக்கப்படுபவர்களைக் கப்பம் பெற்று விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்வதுடன் இவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் விமான நிலையத்திற்கூடாக சட்ட ரீதியற்ற வகையில் இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இராணுவ மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தமது சித்திரவதைக் கூடமாகத் தற்போதும் ஜோசப் முகாமைப் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை விட வேறு இரகசியமான சித்திரவதைக் கூடங்களும் உள்ளன.

போருக்குப் பின்னான காலப்பகுதியில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவோரின் குடும்பங்களைப் பார்க்கும் போது நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். சிலர் பல தடவைகள் அதாவது மூன்று அல்லது நான்கு அல்லது அதற்கும் மேலாக பல தடவைகள் மீண்டும் மீண்டும் வெவ்வேறு தடவைகளில் சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இவர்கள் பிரித்தானியாவில் தஞ்சம் புகுகின்றனர். குறிப்பாக சிறிலங்காவில் இடம்பெற்ற பயங்கரமான யுத்தம் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் தமிழ் மக்கள் இதன் பின்னர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் போது அவர்கள் மனவடுக்களுடன் உள்ளமை உறுதிப்படுத்தப்படுகிறது.

இதனால் இவ்வாறான சித்திரவதைகளிலிருந்து தப்பிப் பிழைத்து பிரித்தானியாவில் தஞ்சம் கோரிய 30 பேருக்கு உளவளத்துணையை மேற்கொள்வதற்கான சிறியதொரு திட்டத்தை நான் அண்மையில் நடைமுறைப்படுத்தியிருந்தேன். இவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு, சுவையான உணவும் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்டவர்கள் எவ்வாறான துன்பங்களை அனுபவித்தனர் என்பதை வெறும் வார்த்தைகளில் விபரிக்க முடியாது.  சித்திரவதைகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு முதலில் அவர்களின் உள உடல் நலன்களை மேம்படுத்துவதற்கான பணிகள் ஆற்றப்பட வேண்டும்.

தற்போது நாங்கள் சந்தித்தவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தமது சுயவிருப்புடன் இணைந்து கொண்டு பயிற்சிகளைப் பெற்று பல ஆண்டுகள் அதில் பணியாற்றியவர்கள் மிகவும் குறைவானவர்களாவர். ஆனால் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகியவர்களே அதிகமாக உள்ளனர்.

நாட்டின் எதிர்காலப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்கின்ற குற்றச்சாட்டின் பேரில் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர்களை சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியுள்ளனர் என்பதற்கு அப்பால் சிறிலங்காவின் குடிமக்கள் என்ற வகையில் தமது ஜனநாயக உரிமைகளைத் தருமாறு கோரும் தமிழ் மக்கள் அனைவரும் சிறிலங்கா அரசால் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்பது தற்போது தெளிவாகிறது. தமிழ் மக்கள் தமது உரிமைகளைத் தருமாறு கோரும் போது இவர்கள் மீண்டும் புலிகள் அமைப்பை ஆரம்பிக்கப் போகிறார்கள் எனக் குற்றம் சாட்டப்படுகின்றனர் என்பதே உண்மையாகும்.

கேள்வி: தாங்கள் இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கு எவ்வளவு காலம் எடுத்தது?

பதில்: சிறிலங்காவில் 2016 தொடக்கம் 2017 வரையான காலப்பகுதியில் சித்திரவதைகளுக்கு உள்ளான 24 பேரிடமிருந்து தகவல்களைப் பெற்று இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 22015ல் சித்திரவதைகளுக்கு உள்ளாகிய 33 பேரிடமிருந்தும் தகவல்கள் பெறப்பட்டன. ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்கள் சந்தித்த பிரச்சினைகளைக் கேட்டறிவதற்கு 3-4 நாட்கள் எடுத்தன. கடந்த 30 மாதங்களாக நாங்கள் இதற்காகப் பணியாற்றியுள்ளோம். நாங்கள் பெற்றுக் கொண்ட தகவல்களை ஆராய்ந்து அவற்றை அறிக்கையாக்கினோம்.

கேள்வி: சித்திரவதைகள், கடத்தல்கள், சட்டரீதியற்ற தடுப்புக்கள், பாலியல் வன்முறைகள், தண்டனைகள் போன்றன தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஆக்கபூர்வமானதொரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு இவ்வாறான மீறல்கள் தடையாக இருக்கும் என்பதை சிறிலங்கா அரசாங்கம் உணர்ந்து கொண்டு அடுத்த சில மாதங்களில் இவற்றை சீர்செய்வதற்கு எவ்வாறான சாதகமான நகர்வுகளை எடுக்க முடியும் என தாங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: சிறிலங்கா அரசாங்கத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளை அரசியல் ரீதியாக அல்லாது நிர்வாக ரீதியாகப் பிரித்துள்ளேன். இவை வெறும் தனிப்பட்ட தெரிவுகளாகும். ஆகவே முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய சில பரிந்துரைகளாக நான் பின்வருவனவற்றைத் தெரிவு செய்துள்ளேன்:

* சனல் 03 ஊடகத்தால் வெளியிடப்பட்ட ‘போர் தவிர்ப்பு வலயம்’ ஆவணப்படம் சிங்கள மொழியில் சிறிலங்கா ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட வேண்டும்.

* நாட்டின் அதிபர், பிரதமர் மற்றும் இராணுவப் படைகளின் தளபதிகள் பலாலி விமான நிலையத்திற்குச் செல்வதுடன் அங்கிருக்கும் பல நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களுக்கு இந்த ஆவணப்படத்தைக் காண்பிப்பதுடன் அவர்களுக்கு இவ்வாறான பாலியல் வன்முறைகளில் மேலும் ஈடுபடக்கூடாது என்பதை அறிவுறுத்த வேண்டும்.

 

* உள்ளக கண்காணிப்பு சேவைகளுக்கான ஐ.நா அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட 2004-7 வரையான காலப்பகுதியில் ஹெய்ற்றியில் சிறிலங்கா அமைதி காக்கும் படைகளால் மேற்கொள்ளப்பட்ட சிறுவர் பாலியல் மீறல்கள் தொடர்பான பதிப்பை அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் வெளியிடுவதுடன் சிறிலங்காப் பாதுகாப்பு வீரர்கள் அல்லது அதிகாரிகள் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் போது தண்;டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பது தொடர்பாகவும் அறிவிக்க வேண்டும்.

*  ஐ.நா அமைதி காக்கும் பணிக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் சிறிலங்கா இராணுவ வீரர்களின் மற்றும் பெண் வீராங்கனைகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் ஒளிப்படங்கள் வெளியிடப்பட வேண்டும்.

* போர்க் குற்றச்சாட்டுக்கள் இடம்பெறவில்லை என்பதை அதிபர் மற்றும் பிரதமர் மறுப்பதை நிறுத்தவேண்டும். அத்துடன் போர்க் கதாநாயகர்கள் என இராணுவ வீரர்களைப் போற்றுவதையும் நிறுத்த வேண்டும்.

* கலப்பு நீதிப் பொறிமுறை தொடர்பாக வெளியிடப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய ஆலோசனைச் செயலணி அறிக்கையை நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் அமுல்படுத்த வேண்டும்.

* மே 18, 2009 தொடக்கம் சரணடைந்தவர்களின் விபரத்தை முல்லைத்தீவு நீதிமன்றில் ஒப்படைக்குமாறு 58வது டிவிசனிற்கு கட்டளையிட வேண்டும்.

நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதும் புதிய சட்டங்கள் தேவைப்படாததுமான விபரங்கள் பின்வருமாறு:

* அதிகாரிகளை நியமிப்பது தொடர்பில் நிறுவக முறைமை ஒன்று சீர்செய்யப்படுவதுடன் உயர் பதவிகளுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களை நியமிப்பதை நிறுத்த வேண்டும்.

* சித்திரவதைகளில் சிசிர மெண்டிஸ் ஈடுபட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக சித்திரவதைக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டும்.

* குற்றம் சுமத்தப்பட்டவர்களைத் தவிர்த்து சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபையை மீளவும் திருத்தியமைக்க வேண்டும்.

* வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்கு அவர்களை சிறிலங்கா தூதரகங்களுக்கு வருமாறு அழைப்பதைத் தவிர்த்து கடிதங்கள் மூலம் வாக்குமூலங்களைப் பெறவேண்டும்.

* அனைத்துலக சமூகத்தின் உதவியுடன் நம்பகமான சுயாதீன விசாரணைப் பிரிவொன்றை உருவாக்குதல், இதன் மூலம் குற்றவாளிகள் பொறுப்புக்கூறுவதிலிருந்து தப்பிக்க முடியாது.

* ஜோசப் முகாம் அகற்றப்பட வேண்டும்.

f-h2

* சிறிலங்காவிற்கு வெளியே வாழும் பல ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கான சுயாதீன ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் பாதுகாக்கப்பட வேண்டும்.

கேள்வி: தாங்கள் தற்போது முன்வைத்த விடயங்களை அமுல்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஏதாவது நகர்வை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?

பதில்: இல்லை

கேள்வி: சிறிலங்காவில் இடம்பெறும் திட்டமிட்ட சித்திரவதைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட குற்றங்களை இல்லாதொழிப்பதற்கு அனைத்துலக சமூகமானது எந்தவகையில் சிறிலங்காவிற்கு உதவமுடியும்?

பதில்: மனித உரிமைகள் விவகாரத்தில் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் மிகத் துரிதமாக அதிகரிக்கப்பட வேண்டும். சிறிலங்காவில் தொடரப்படும் வன்முறைகள் மற்றும் மீறல்கள் போன்றன மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பை வழங்கும் எனவும் அவ்வாறு நடந்தால் நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது எனவும் ஐ.நாவில் பலர் வாதிட்டுள்ளதை நான் கேட்டுள்ளேன்.

ஆட்சி மாற்றம் மற்றும் அரசாங்கத்தை ஆதரித்தல் மற்றும் எதிர்த்தல் போன்ற எந்தவொன்றிலும் அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான நிகழ்ச்சித் திட்டம் ஆர்வம் காண்பிக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தால் வாக்குறுதி வழங்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். 2009ல் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் தான் இழைத்த தவறுகளிலிருந்து ஐ.நா பாடத்தைக் கற்றுக்கொள்வதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெளிவாக குரல் கொடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். தமக்காக எவரும் குரல் கொடுக்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதை நாம் பார்க்கின்றோம்.

2009ல் சிறிலங்கா விடயத்தில் ஐ.நா தலையீடு செய்யத் தவறியதால் ஐ.நாவின் ‘உரிமைகளுக்கான முன்னணி’ தோற்றம் பெறக் காரணமாகியது. ஆனால் சிறிலங்கா விடயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது துன்பகரமானது. பெலிஸ் காயர் மற்றும் பென் எமர்சன் போன்ற சுயாதீன வல்லுனர்கள் சிறிலங்காவில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

அரசியல் சக்தி என்ற நிலையிலிருந்து புலிகள் அமைப்பு நீக்கப்பட்டால் ‘பிரச்சினைக்குத்’ தீர்வு காணப்பட முடியும் என அனைத்துலக சமூகம் 2009ல் யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்த போது கூறியதையும் புலிகள் தோற்கடிக்கப்பட்டு சில ஆண்டுகளின் பின்னர், ராஜபக்ச ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டால் ‘பிரச்சினை’ தீரும் என எடுகோலாகக் கூறப்பட்டதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இவ்வாறான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தனிநபர்களைக் குற்றம் சுமத்த முடியாது. இவற்றுக்கு திட்டமிட்ட மற்றும் நிறுவக ரீதியான தோல்வியே காரணமாகும்.

சிறிலங்காவில் 2015ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது  அனைத்துலக சமூகத்தால் சிறிலங்காவிற்கு பிறிதொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. சிறிலங்காவில் கலப்பு நீதிப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இன்னமும் இது நிறைவேற்றப்படவில்லை. ஆகவே இது தொடர்பில் புதியதும் அதிநவீன அனைத்துலக அணுகுமுறையும் மிகத் துரிதமாக வரையறுக்கப்பட வேண்டும்.

இது நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ‘புலி முத்திரை’ குத்தப்பட்டு கைதுசெய்யப்படுவோர் சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பிகளால் சுடப்படும் நிலை தடுக்கப்படும் என நான் நம்புகிறேன்.

செவ்வி              –  Taylor Dibbert
வழிமூலம்        – The Diplomat
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a comment