அண்ணி மரணம்: ஜெயிலில் கண்ணீர் விட்டு கதறிய சசிகலா

228 0

டி.டி.வி. தினகரனின் மாமியார் சந்தானலட்சுமியின் இறுதி சடங்கில் பங்கேற்க சசிகலாவுக்கு பரோல் மறுக்கப்பட்டதையடுத்து சோகத்தில் மூழ்கிய அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா சோதனை மேல் சோதனையை சந்தித்து வருகிறார்.

15 நாட்களுக்கு முன்பு சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டு விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது.

சசிகலா ஜெயிலில் சொகுசாக இருந்த அறை மற்றும் அவர் ஜெயிலில் வலம் வரும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் சசிகலாவை சந்திக்க வருபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தினகரன் கூட இரண்டு முறை சசிகலாவை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். வக்கீல்களும் அவரை 10 நிமிடம் மட்டுமே சந்தித்து விட்டு திரும்பினர்.

சசிகலாவுக்கு ஜெயிலில் கொடுக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் சசிகலா அதிர்ச்சியுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து மரணத்தை தழுவி வருவது அவருக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சசிகலாவின் உறவினர் மகாதேவன் இறந்தார். அப்போது அவருக்கு பரோல் மறுக்கப்பட்டது.அவரது அண்ணி சந்தானலட்சுமி இறந்தார். இதற்கும் அவருக்கு பரோல் கிடைக்கவில்லை. இதனால் சோகத்தில் மூழ்கிய சசிகலா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

அவ்வப்போது ஆறுதல் கூறி வரும் கன்னட பெண் கைதியிடம் தனது வருத்தத்தைக் கூறி கண்ணீர் விட்டு கதறினார். 4 மாதத்தில் உறவினர்கள் 2 பேர் இறந்ததால் மிகுந்த மன வருத்தத்தில் சசிகலா உள்ளார்.தற்போது அவருக்கு ஆறுதல் கூறும் ஒரே நபர் அவரது அண்ணி இளவரசி மட்டுமே. சுதாகரன் ஆண்கள் சிறையில் இருப்பதால் அவர் சசிகலாவையும், இளவரசியையும் சந்திப்பது இல்லை.

ஜெயிலில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து தினமும் சசிகலா ஜெயிலில் சிவலிங்கத்துக்கு பூஜை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஏப்ரல் மாதம் மகாதேவன் இறந்ததால் ஒரு வாரம் பூஜை செய்யாமல் இருந்தார். தற்போது அண்ணி இறந்ததால் 2 நாட்களாக சிவலிங்கத்துக்கு பூஜை செய்யவில்லை.

தற்போது வெளியில் இருந்து எதுவும் கொண்டுவர முடியாததால் சிறை வளாகத்தில் உள்ள பூக்களை பறித்து சிவலிங்கத்துக்கு மாலையாக போட்டு வருகிறார்.சிவலிங்கத்துக்கு வெறும் தண்ணீரை கொண்டு ஜல அபி‌ஷகம் நடத்தி வருகிறார். சசிகலாவைப்போல் சுதாகரன் காளிக்கு பூஜை செய்து வருகிறார்.

Leave a comment