மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கு களமிறங்கும் இலங்கைத் தமிழ்ப் பெண்!

420 0

அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் தேர்தலில் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான 37 வயதுடைய, கிரிசாந்தி விக்னராஜா போட்டியிடவுள்ளதாக அமெரிக்க ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவின், கொள்கைப் பணிப்பாளர்களில் ஒருவராக செயற்பட்ட கிரிசாந்தி விக்னராஜா, மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார்.

பலர் என்னைக் களமிறங்குமாறு ஊக்குவிக்கிறார்கள், இதுபற்றி நான் தீவிரமாக ஆலோசித்து வருகிறேன் என்று அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இலங்கை வாழ் பெண்ணான கிரிசாந்த விக்னராஜா, வொசிங்டன் போஸ்ட் நாளிதழிடம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ்ப் பெற்றோரின் மகளான கிரிசாந்தி மேரிலன்ட் ஆளுனர் பதவிக்குப் போட்டியிடுவதை அங்குள்ள தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த அமெரிக்கர்கள் வரவேற்றுள்ளனர்.

கிரிசாந்தி, யேல் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுமாணிப் பட்டத்தையும், லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக உறவுகளுக்கான முதுமாணிப் பட்டத்தையும் பெற்றவர். யேல் சட்டப் பாடசாலையில் சட்டமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

ஒபாமா ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான, மிச்சேல் ஒபாமாவின், கொள்கை மற்றும் அனைத்துலக விவகாரங்களுக்கான பணிப்பாளராக இவர் கடமையாற்றினார். இவர் வெள்ளை மாளிகையில் பணியாற்றிய போது. உலகில் 60 மில்லியன் பெண்பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கும் திட்டத்துக்கான முன்முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

வெள்ளை மாளிகையில் பணியாற்றுவதற்கு முன்னர், கிரிசாந்தி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பணியாற்றியிருந்தார். ஐ.நாவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

இவரது பெற்றோர் இலங்கையின் உள்நாட்டுப் போரினால் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். இவர்கள் இருவரும் பால்டிமோர் நகர பொது பாடசாலையின் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment