முன்னாள் விமானப் படைத் தளபதி ஹர்ஷ துமிந்த அபேவிக்ரமவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று மீண்டும் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இறுதியாக நோட்டீஸ் விடுக்கப்படுவதாக, கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ராகல இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு, ஹர்ஷ துமிந்த அபேவிக்ரமவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
எனினும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையிலேயே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் எச்சரிக்கை என, அம்பாறை முன்னாள் நகராதிபதி இந்திக்க நலின் எனக் கூறிக் கொண்டு, முன்னாள் விமானப் படைத் தளபதிக்கு தொலைபேசி அழைப்ப ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், முன்னாள் கடற்படைத் தளபதியால் விமானப் படை ஊழியர் ஒருவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கூறியதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முதலாவது சாட்சியாளராக ஹர்ஷ துமிந்த அபேவிக்ரம பெயரிடப்பட்டுள்ளார். இந்த விடயம் குறித்து சாட்சியமளிக்கவே அவருக்கு இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

