இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

1511 0

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு, ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.றியால், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த மாணவி வித்தியா படுகொலை வழக்கில், பிரதான சந்தேக நபரா சுவிஸ் குமாரை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுவது தொடர்பிலேயே வாக்குமூலம் பெறுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

வித்தியா கொலையில் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை சுற்றிவளைத்த பிரதேசவாசிகள், அவரை மின்கம்பத்தில் கட்டிவைத்திருந்த போது, அவரை காவல்துறையினரிடம் ஒப்படைக்காமால் விடுவிக்க அழுத்தம் கொடுத்ததாக, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க, ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்தக் குற்றச்சாட்டை விஜயகலா மீது முன்வைத்திருந்தார்.

லலித் ஜெயசிங்க சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், சுவிஸ்குமாரை மக்கள் கட்டி வைத்திருந்தபோது அந்த இடத்துக்கு, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சென்று அவரை விடுவித்ததாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அது தொடர்பான காணொளியை நீதிமன்றில் சமர்ப்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து, விஜயகலா மகேஸ்வரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணை நடத்துமாறும், வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளுமாறும் குற்றப் புலனாய்வு துறையினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment