மீண்டும் ஆட்சிக்கு வர சில தரப்பினர் சூழ்ச்சி – அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்கிறார் மைத்திரி

266 0

மக்களால் ஆட்சி அதிகாரம் இல்லாது செய்யப்பட்ட தரப்பினர், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டாலும் ஆளும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஒருவராலும் முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இப்பாகமுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

முன்னைய ஜனாதிபதி, கொழும்பில் துறைமுக நகரை நிர்மானிப்பதற்காக 2000 ஏக்கர் காணியை, காணி உறுதியுடன் வழங்கி இருந்தார்.

தாம் பதவிக்கு வந்தப்பின்னரே அந்த உறுதிகளை ரத்து செய்து, குத்தகை அடிப்படையில் அந்த காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது

இதேபோன்ற தனியார் ஹோட்டல் துறையினருக்கும் காணிகள் காணி உறுதியுடன் வழங்கப்பட்டன.

அந்த காலத்தில் நாட்டுபற்றாளர்கள் யாரும் வெளியில் வந்து போராட்டம் நடத்தாமல், கட்டிலுக்கு கீழே மறைந்திருந்தனர்.

போராட்டம் நடத்திய பலர் அந்த காலப்பகுதியில் காணாமல் போனமையே இதற்கு காரணமாகும்.

ஆனால் அவ்வாறான நாட்டுப்பற்றாளர்கள் வெளியில் வந்து போராட்டம் நடத்தும் சுதந்திரத்தை தமது அரசாங்கமே வழங்கியது.

தற்போது ஆட்சிக்கு விரைவாக வந்துவிட வேண்டும் என்ற துடிப்பில் சிலர் சூழ்ச்சிகளை மேற்கொண்டு ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கின்றனர்.

ஆனால் இந்த அரசாங்கம் ஒன்றும் வெட்டி வீழ்த்திவிட்டு கடந்து செல்வதற்கு பாதை ஓரமாக இருக்கும் காய்ந்த மரம் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a comment