இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் அதிரடி தீர்மானங்கள் – சற்றே பதற்றநிலை

376 0

 இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டரை வருடங்களில் மிக கடுமையான நடவடிக்கைகளில் தற்போது இறங்கியுள்ளது.
அதாவது தொழிற்சங்கம் ஒன்றின் கோரிக்கைக்கு செவிசாய்க்காது இராணுவத்தினைக் கொண்டு அவர்களின் பணிகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் ஹம்பாந்தோடை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கம் முதல்முறையாக கடுமையான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய விநியோக நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியது.
அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி, ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாட்டில் இன்று காலை முதல் இராணுவத்தினர் ஈடுபடுவார் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன அறிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் முக்கிய பெற்றோலிய கூட்டுத்தாபனங்களாக முத்துராஜவல மற்றும் கொலன்னாவ களஞ்சிய சாலையில் பெற்றோலியத்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு எண்ணெய் பெற்றுக்கொள்ள வராத பௌசர்களின் அனுமதி ரத்துச் செய்யப்படும் என அதிரடி அறிவிப்பை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அத்துடன் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் பெற்றோலிய பணியாளர்கள் இன்றைய தினம் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், அவ்வாறு திரும்பாத பட்சத்தில் அவர்கள் பணியில் இருந்து தானாகவே இடைவிலகியதாக கருதப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அதிரடி தீர்மானங்களினால் இலங்கையில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment