நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு!

213 0
கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடளாவிய ரீதியாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கனிய எண்ணெய் தொழிற்சஙக ஒன்றியத்தின் இணை அழைப்பாளர் பந்துல சமன்குமார இதனை தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் நாளை மதியமாகும் போது வானூர்திகளுக்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவது உள்ளிட்ட மூன்று கோரிக்கைளை முன்வைத்து கனிய எண்ணை தொழிற்சங்க ஒன்றியம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது.
தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படும் என கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை அழைப்பாளர் பந்துல சமன்குமார தெரிவித்துள்ளார்.
கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றிய பணியாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகே நீண்ட வரிசையில் வாகன சாரதிகளும் பொது மக்களும் காத்திருப்பதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் தீர்ந்து விட்டதன் காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றிய பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்சியாக மேற்கொள்ளப்படுவதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் முகாமைத்து பணிப்பாளர் ஷியாம் போரா இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதன் காரணமாக திருகோணமலையில் இருந்து எரிபொருளை கொண்டு வர நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment