மக்கள் குடியிருப்புகளை விட்டு மயானங்கள் அகற்றப்படுவது அவசியம்

236 0
மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியிலிருக்கும் மயானங்களை அகற்றி, அவற்றுக்குப் பொருத்தமான இடங்களில் அவற்றை அமைப்பது அவசியமாகும். இதனை மனிதாபிமான ரீதியாகவும் சமூக நீதியாகவும் செய்ய வேண்டும். இந்தப் பொறுப்பு தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் மாகாணசபை நிர்வாகத்துக்கும் உண்டு. இதைக் காலம் கடத்தாமல் உரிய தரப்புகள் செய்ய வேண்டும் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையத்துக்கு முன்பாக கிந்துசிட்டி மயானத்தை அகற்றுமாறு கோரி மக்கள் நடத்தும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவாகக் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கே அவர் தொடர்ந்து உரையாற்றும்போது, இந்த மக்களின் நியாயமான  உணர்வுகளை இங்கே நான் பார்க்கிறேன். தாங்கள் வாழ்கின்ற குடியிருப்புகளுக்கு மத்தியிலிருக்கும் மயானத்தைத் தயவு செய்து அகற்றுங்கள் என்று இவர்கள் பலரிடமும் பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் கோரிக்கைகள் எல்லாமே உயர் மட்டத்தினரால் கவனத்திற் கொள்ளப்படவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இந்த மக்களை விட தங்களுக்கான மயானமே முக்கியம் எனக் கருதுகிறார்கள். ஆனால், மயானத்தை விட மக்களே முக்கியமானவர்கள். மக்களுக்கானதே மயானம் . ஆகவே அப்படி மக்களுக்குத் தேவையான மயானத்தை மக்கள் குடியிருக்காத இடத்தில் அமைக்கலாம். இங்கே உள்ள கிந்துசிட்டி மயானத்தை காலி செய்து விட்டு,அதை இந்தச் சுற்றாடலில் உள்ள வேறு மயானத்துடன் இணைத்து விடலாம். இதையே இந்த மக்கள் கேட்கிறார்கள். நான் கிந்துசிட்டி மயானம் உள்ள இடத்துக்கு நேரிலே சென்று பார்த்தேன். என்னமாதிரியான ஒரு கொடுமையான சூழலில் அந்த மயானம் அமைந்துள்ளது. மக்களின் வீடுகளின் ஓரமாக மயானம் உள்ளது. இப்படி மயானம் இருந்தால் மக்கள் எப்படித் தங்களுடைய வீடுகளில் நிம்மதியாக இருக்க முடியும்? ஆகவேதான் இந்த மயானத்தை எப்படியாவது அப்புறப்படுத்துங்கள் என்று கேட்கிறேன்.
ஆனால், இதை ஆதிக்கச் சக்திகள் இலகுவில் செய்யாது என்று எனக்குத் தெரியும். இதனால்தான் இந்த மயானப்பிரச்சினையில் பங்கு பற்றிப் போராடிய சிலர் இன்று சிறை செல்ல வேண்டி ஏற்பட்டது. அப்படிச் சிறையில் தங்கள் உறவுகள் இருக்கின்றபோதும் அதையிடடுக் கலங்காமல், பின்வாங்காமல், தொடர்ந்து போராடும் இந்த மக்களின் உறுதியையும் ஒற்றுமையையும் கண்டு வியக்கிறேன். எமது மண்ணிலே இன்று ஏராளமான போராட்டங்கள் நடக்கின்றன. பல போராட்டங்கள் இலங்கை அரசுக்கு எதிரானவை. அல்லது இலங்கை அரசிடம் நீதி கேட்டு நடத்தப்படுகின்றவை. இங்கே நடக்கின்ற போராட்டம் தமிழ்த்தலைமைகளிடம் நீதி கேட்டு நடத்தப்படுகின்ற போராட்டமாகும். மாகாணசபையிடம் நீதி கேட்டு நடத்தப்படுகின்ற போராட்டமாகும். இங்கே உள்ள கோரிக்கைகள் கூட மாகாணசபையை முன்னிறுத்தியே கேட்கப்பட்டிருப்பதை இங்கே நாம் பார்க்கிறோம்.
இங்கே மயானத்தை அகற்றுவது மட்டும்தான் பிரச்சினை என்றில்லை. செறிவாக நிலையில் மக்கள் வாழ்கின்ற இந்தப் பகுதியின் வீதிகள் செப்பனிடப்படாமல் உள்ளன. இந்த மக்களுடைய பொருளாதாரத்தையும் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்த வேண்டியுள்ளது. இங்குள்ள பிள்ளைகளின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டியிருக்கிறது. இதைப்பற்றி இங்கே இருக்கின்ற அரசியல் தலைமைகளுக்கு எந்த அக்கறையுமே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை தங்களுக்கான வாக்குகளே முக்கியமானது. அதற்கு அப்பால் அவர்கள் எதைப்பற்றியும் சிந்திக்க மாட்டார்கள். ஆகவேதான் நாம் இந்தப்பிரச்சினையில் இணைந்து நின்று அவர்களுக்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். மக்களுடைய இந்த உறுதி மிக்க போராட்டமானது வியப்புக்குரியது. கிராமமே ஒன்றிணைந்து நின்று தொடர்ச்சியாகப் போராடி வருகிறது. யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் உள்ள மக்கள் இந்த முன்னிரவு நேரத்தில் தொலைக்காட்சிகளில் தொடர்நாடகங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும்போது இந்த மக்களோ தங்கள் வாழ்க்கைப் பிரச்சினைக்காக போராட்டக் கொட்டகையில் அமர்ந்திருக்கிறார்கள். இவர்களை வழிநடத்தும் எமது தோழமைகள் அனைவருக்கும் எனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருகிறேன். இந்தப் போராட்டம் நிச்சயமாக வெற்றியடைய வேண்டும். அதற்கான தார்மீக ஆதரவை சமத்தும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு எப்போதும் தரும் என்று உறுதிகூறுகிறேன் என்றார்.
இந்தப் போராட்டத்தின்போது புதிய மாக்ஸிஸ லெனினிஸக் கட்சியின் செயலாளர் சி.கா செந்தில்வேல், தேசிய கலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்த க. தணிசாலம், எழுத்தாளர்கள் கிரிஷாந், கருணாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a comment