மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி முன்சன்.

18795 0

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனியின் பல பாகங்களிலும் உள்ள தமிழாலயங்களை இணைத்து மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயமே. அந்த வகையில் 22.7.2017 சனிக்கிழமை யேர்மனியில் முன்சன் நகரத்தில் யேர்மனியின் தென்மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டிகளில் யேர்மனியின் தென்மாநிலத்தில் உள்ள பதினொரு தமிழாலயங்களைச் சேர்ந்த 540 மாணவமாணவிகள் மிகத் தூரத்திலிருந்து வந்து போட்டிகளில் பங்குபற்றி தங்கள் திறமைகளை நிலைநாட்டினார்கள்.

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அந்த மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் துயிலும் இல்லத்திற்கு ஈகைச்சுடர் மற்றும் மலர்வணக்கம் மாவீரர்களின் சகோதரிகளால் ஏற்றிவைக்கப்பட்டது. பின் யேர்மனியத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்படு தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. பின்பு தமிழ்க்கல்விக்கழகத்தின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதைனைத் தொடர்ந்து மாணவமாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்று விளையாட்டுத் தீபமும் ஏற்றிவைக்கப்பட்ட பினபு;. முன்சன் தமிழாலய மாணவமாணவிகளின் சிறப்பு நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது. நூற்றிஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவமாணவிகளை இணைத்து மைதானத்தின் நடுப்பகுதியில் ஒலிம்பிக் வளையம் செய்து காண்பிக்கப்பட்டதுடன் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களான கார்த்திகைப்பூ, சிறுத்தை, செண்பகம், வாகைமரம் என்பன மாணவமாணவிகளால் மைதானத்துக்குப் பெரிய பதாதைகள் மூலம் கொண்டுவரப்பட்டது. அப்போது மைதானத்தில் ஒலிம்பிக்வளையம் போல் தங்களை வடிவமைத்திருந்த மாணவமாணவிகள் அழகாக அசைந்து தமிழீழம் என்ற சொல்லை வடிவமைத்துக் காண்பித்தார்கள்.

பின்பு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்றது வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு உடனுக்குடன் வெற்றிப் பதங்கங்கள் அணிவித்து மதிப்பளிக்கப்பட்டது. இறுதியாக மூண்று போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவமாணவிகளுக்கு வெற்றிக் கேடயமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது,
இப்போட்டிகளில் பங்குபற்றி அதிக புள்ளிகளைப் பெற்ற முதல் மூண்று தமிழாலயங்களுக்கு வெற்றிக்கேடயம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

அந்த வகையில்
முதலாவது இடத்தை முன்சன் தமிழாலயமும்
இரண்டாவது இடத்தை ஸ்ருட்காட் தமிழாலயமும்
மூண்றாவது இடத்தை ருட்லிங்கன் தமிழாலயமும்
பெற்றுக் கொண்டன.

 

Leave a comment