குவெட்டா மனிதகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

388 0

201608091021372520_IS-claim-Suicide-bomb-attack-at-Quetta--hospital_SECVPFபாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேஷன் தலைவர் பிலால் அன்வர் காசி என்பவரை நேற்று சில மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டனர்.  இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவரை  உடனடியாக  சக வழக்கறிஞர்கள் குவெட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்த ஏராளமான வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவு பகுதியில் திரண்டனர். அப்போது, அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 25 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுபற்றிய தகவல் வெளியானதும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் ஆகியோர் குவெட்டா அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன், பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் ஜமாத்-உர்-அஹ்ரார் என்ற தீவிரவாத இயக்கம் முன்னர் அறிவித்திருந்தது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பலர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் குவெட்டா குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது, தங்கள் இயக்கத்தை சேர்ந்த ஒரு ‘தியாகி’ இந்த மனித குண்டு தாக்குதலை நிகழ்த்தியதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு சொந்தமான ஊடகம் அறிவித்துள்ளது.