அதிக பாரம் ஏற்றிச்செல்லும் டிரைவர்களின் உரிமத்தை ரத்து செய்ய தடை விதிக்க வேண்டும்

253 0

அதிக பாரம் ஏற்றிச்செல்லும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சுகுமார், அகில இந்திய வாகன ஓட்டுனர்கள் பேரவையின் தலைவர் குணசேகரன், தமிழ்நாடு மணல் லாரிகள் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில் கூறி இருப்பதாவது:-

லாரி போன்ற வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட பாரத்தை விட அதிக பாரம் ஏற்றிச் செல்லும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை நிறுத்தி வைப்பது, ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சமீபத்தில் ஒரு சுற்றறிக்கையை சாலை போக்குவரத்து அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார்.

இந்த உத்தரவால் டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிமெண்டு லாரிகள், மணல் லாரிகள், உணவுக் கழகத்தின் லாரிகள், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் லாரிகள், ரெயில்வே லாரிகள் அதிக பாரம் ஏற்றிச் செல்வதை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை.

எனவே, அதிக பாரம் ஏற்றிச் செல்லும் டிரைவர்களின் உரிமத்தை நிறுத்தி வைப்பது, ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுக்கள் நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் எஸ்.கோவிந்தராமன் ஆஜரானார்.மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் 4 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Leave a comment