அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாளர் வருகை பதிவேட்டை ஆய்வு செய்யவேண்டும்

159396 0

அரசு ஆஸ்பத்திரிகளில் ஒப்பந்த பணியாளர் நியமனம் செய்ததில் நிறைய முறைகேடு நடந்துள்ளது என்றும், அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள பணியாளர் வருகை பதிவேட்டை ஆய்வு செய்யவேண்டும் என்று அறப்போர் இயக்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

அறப்போர் இயக்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் நியமனத்துக்கான ‘டெண்டர்’ பத்மாவதி ஹாஸ்பிடாலிடீஸ் எனும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

இந்த நிறுவனம் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவின் பினாமி நிறுவனம் தான் என்றும், இந்த டெண்டர் விவகாரத்தில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளதையும் ஆதாரத்துடன் சி.பி.ஐ. மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொடுத்திருந்தோம். ஆனால் இந்த புகார் மீதான விசாரணையில் அதிகாரிகள் மெத்தன போக்கைத்தான் கடைபிடித்து வருகிறார்கள். இரக்கமில்லாத இந்த ஊழலை யாரும் விசாரிக்கவும் முன்வரவில்லை, ஆராயவும் இல்லை.

உண்மையில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டதில் அதிகாரம் விளையாடி இருக்கிறது. ராமமோகன ராவ் தனது பதவியை தவறான வழியில் பயன்படுத்தி, இந்த ‘டெண்டரை’ தனது பினாமி நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறார். அப்படி எடுக்கப்பட்ட டெண்டரில் 100 சதவீதம் பணியாளர்களுக்கான அரசு பணத்தை வாங்கி, வெறும் 40 சதவீதம் பணியாளர்களே பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இதற்கான ஆதாரங்களும் எங்களிடம் உண்டு.

ஒப்பந்த பணியாளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறையில் கைரேகை வைத்து வருகை பதிவிட வேண்டும் என்று தான் விதி உள்ளது. ஆனால் இன்னமும் அரசு ஆஸ்பத்திரிகளில் பதிவேடுகள் மூலம் தான் பணியாளர்கள் வருகை குறிப்பிடப்பட்டு வருகிறது. இதில்தான் முறைகேடு அதிகம் நடக்கிறது. ஒருவர் பல கையெழுத்துகள் போடுகிறார்கள். விடுப்பில் உள்ள பணியாளர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து பணியாற்றி இருப்பதாக நாங்கள் கூறவில்லை, பதிவேட்டில் உள்ள கையெழுத்துகள் கூறுகிறது.

குறைந்த அளவில் நியமிக்கப்பட்டுள்ள இந்த பணியாளர்களுக்கு ஊதியமும் குறைவாகவே வழங்கப்படுகிறது. எனவே அவர்கள் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் இருந்து லஞ்சம் வாங்குகிறார்கள். இதனால் கண்ணியத்துக்குரிய மருத்துவ சேவையில் லஞ்சம் பெருகுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பணியாளர் பதிவேட்டையும் உடனடியாக ஆய்வு செய்யவேண்டும். பதிவேட்டில் குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும் பணியில் உள்ளனரா? என்று விசாரிக்கப்பட வேண்டும். குற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் பத்மாவதி ஹாஸ்பிடாலிடீஸ் நிறுவன டெண்டர் உரிமையை ரத்து செய்யவேண்டும்.

சுகாதாரத்துறை தொடர்ச்சியான ஊழல்களில் சிக்குவதால் அத்துறையின் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இந்த ஊழல் மற்றும் முறைகேடு குறித்து விசாரிக்க ஒரு மத்திய அமைப்பு அல்லது நீதிபதி தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும். ஊழல் ததும்பும் இந்த மாநிலத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வரப்பட வேண்டும். அதுவே சிறந்த தீர்வாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a comment