ஜனாதிபதி தேர்தலில் வெற்றி: ராம்நாத் கோவிந்துக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்து

6723 0

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் நேற்று வெற்றி பெற்றார். அவருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்திய ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற உங்களுக்கு என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

ஜனாதிபதி மாளிகையில் நீங்கள் பதவி வகிக்கும் காலகட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்க வேண்டும் என தனிப்பட்ட முறையிலும், தமிழக மக்கள் சார்பிலும் வாழ்த்து தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை எதிர்க் கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு தி.மு.க. சார்பிலும், கட்சியின் தலைவர் கருணாநிதி சார்பிலும் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மாண்புகளை நிலைநாட்டி, மதசார்பற்ற தன்மை உள்ளிட்ட இத்திருநாட்டின் பன்முக தன்மையை போற்றி பாதுகாப்பதில் அவர் உறுதியாக இருப்பார் என்று மனதார நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத்தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சியின் நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், அகில இந்திய மக்கள் கழக தலைவர் அஸ்மத்துல்லா உள்பட பல்வேறு தமிழக தலைவர்கள் ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Leave a comment