சாகுபடி பணிகளுக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் இன்று திறப்பு

21329 0

குமரி மாவட்டத்தில் சாகுபடி பணிகளுக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.பி., கலெக்டர் ஆகியோர் பங்கேற்றனர்.

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையை நம்பியே விவசாயம் நடந்து வருகிறது.

இதற்காக குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றார் அணைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு பாசன தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்தப்படி பெய்யவில்லை.

மழையை நம்பி சாகுபடி பணிகளில் ஈடுபட்ட விவசாயிகள் தண்ணீரின்றி பயிர்கள் கருகுவதை பார்த்து கண்ணீர்விட்டனர். அவர்கள் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் உள்ள தண்ணீரை திறந்து விட்டு பயிர்களை காப்பாற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

இதையடுத்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான விஜயகுமார் பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன்பேரில் அரசு இதற்கான ஒப்புதலை வழங்கியது.

இதனை நேற்று நாகர்கோவிலில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றார் 1,2 அணைகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டது.

பேச்சிப்பாறை அணையில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சாவன் மற்றும் விஜயகுமார் எம்.பி. ஆகியோர் தலைமையில் அணையின் ‌ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்ட விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றார் 1,2 அணைகள் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 880 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதன்மூலம் தோவாளை கால்வாய், அனந்தனார் கால்வாய், நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய், பத்மநாபபுரம் கால்வாய், பட்டணங்கால் கால்வாய்களில் தண்ணீர் விடப்படும். இதன்மூலம் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயத்துறை அதிகாரிகள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிஜாமூதீன், மற்றும் மாவட்ட துணை தலைவர் வக்கீல் ஞானசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசகன், ஜெயலலிதா பேரவை தலைவர் கனகராஜன், பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ், மீன்வள தலைவர் சகாயம், நீர் பாசன தலைவர் வின்ஸ் ஆன்றோ மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணை நீரை நம்பி பாசனம் செய்யும் ஏராளமான விவசாயிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a comment