Breaking News
Home / ஆசிரியர் தலையங்கம் / தமிழீழத் தனியரசு ஒன்றே தீர்வு!

தமிழீழத் தனியரசு ஒன்றே தீர்வு!

2000px-Tamil_eelam_map.svgதமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை தமது இலட்சியங்களாக வரித்து அதற்காக தமது இரத்தத்தைப் பாய்ச்சி வளர்த்து பெருவிருட்சமாக்கிய ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களின் கனவான சுதந்திர தமிழீழத் தனியரசு ஒன்றே இலங்கைத் தீவில் நீடித்துவரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகும்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே முந்தைத் தமிழ் மன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்ட தமிழீழ மண்ணில்தான் எமது இனத்தின் வேர் ஆழவேரோடியுள்ளது.

வரலாற்று ரீதியாக எமக்கே உரித்தான, எமது மூதாதையர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணில் நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் அகிம்சை வழியில் ஆரம்பிக்கப்பட்டு ஆயுதவழியில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அறவழிப் போராட்டமாக ஆறு தசாப்தங்கள் கடந்தும் நீடித்து வருகிறது.

தமிழரின் தேசியப் பிரச்சினையை நீதியான முறையில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் சிங்கள தேசத்தை ஆளும் எந்த அரசியற் கட்சியிடமும் இல்லையென்பது வரலாறு மெய்பித்து நிற்கும் பேருண்மையாகும்.

சிங்கள தேசத்தின் அனைத்துக் கட்டமைப்புகளிலும் அடியாழம் வரை சிங்களப் பௌத்தப் பேரினவாதச் சித்தாந்தம் ஊடுருவி நிற்கிறது. அந்த கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒற்றையாட்சிக்குள் தீர்வினத் தேடும் சிங்களத் தலைமகளின் கடும்போக்கே, தமிழர்களின் அரசியல் அபிலாசைகளின் அடிப்படையாக விளங்கும் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாட்டின் அடிப்படையிலான தமிழீழத் தனியரசு என்ற ஒரே தீர்வை நோக்கியதான போராட்டத்தின் விதையாகும்.

இந்த வரலாற்றுப் புறநிலையை வசதியாக மறந்துவிட்டு பிளவுபடாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வென்றும், 13 என்றும், 13+ என்றும் சிங்களப் பௌத்தப் பேரினவாத ஆட்சியாளர்களின் குரலாக தமிழர் தரப்பில் இருந்து சிலரால் எழுப்பப்பட்டு வருகிறமையானது அடிபணிவு அரசியலின் வெளிப்பாடேயாகும்.

தமிழர் தாயகத்தில் சிங்களப் பௌத்தப் பேரினவாதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலைக்கு பலியானவர்கள் ஒருவர் இருவரல்ல இலட்சக்கணக்கான தமிழர்கள். சூறையாடப்பட்டும், குண்டுவீசியும் அழிக்கப்பட்ட தமிழர்களது சொத்துக்கள் கொஞ்ச நஞ்சமில்லை கோடான கோடிக்கும் மேலாகும்.

தமிழினத்தின் ஆன்மாவில் ஆழமான வடுவாக பதிந்துபோயுள்ள இனவழிப்பு கொடூரத்திற்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வக்கற்றவர்கள் இராசதந்திரத்தின் பெயரால் மேற்கொண்டுவரும் அடிபணிவு அரசியல் மூலம் தமிழர்களை பேரழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல முயன்றுவருகிறார்கள்.

இவ்வளவு அழிவுகளையும், இழப்புகளையும் சந்தித்து, தியாகங்கள் புரிந்து, உயிர்களை பறிகொடுத்த நிலையில் நாங்கள் கேட்பது சலுகைகளை அல்ல உரிமையே.

“சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும்; தன்மானம் இழந்து தலை குனிந்து வாழவேண்டும்; பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும்; படிப்படியாக அழிந்து போகவேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.” என்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய சுதந்திர தனித் தமிழீழத்தை வென்றெடுப்பது ஒன்றே தமிழர்களாகிய நாம் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ ஒரே தீர்வாகும்.

-ஆசிரியர்-
குறியீடு இணையம்.

About சிறி

மேலும்

முதலமைச்சரை அந்நியப்படுத்த சதி: கனடா நிதிசேகரிப்பில் நடந்தது என்ன?

வட மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து முதல்வர் மீதும் அவரைச் சார்ந்ததோர் மீதும் அவதூறுகளைப் பரப்பும் வகையில் சில …