ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற அறிவுரைகள் அறிவிப்பு

24597 0

ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற அறிவுரைகள், தலைமைச் செயலக நுழைவு வாயில்களில் ஒட்டப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற அறிவுரைகள், தலைமைச் செயலக நுழைவு வாயில்களில் ஒட்டப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (17-ந் தேதி) நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடியும். இந்த தேர்தலில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏ.க்களின் வாக்குப்பதிவு நடைபெறும். எம்.பி.க்கள் டெல்லியில் வாக்களிப்பார்கள். இந்திய தேர்தல் கமிஷனின் முன்அனுமதி பெற்றுள்ள எம்.பி.க்கள் மாநிலத்தில் வாக்களிக்கலாம்.

தமிழக சட்டசபை அருகில் உள்ள குழு கூட்ட அறையில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்த குழு கூட்ட அறைக்கு அருகில் உள்ள வாயில்களில், எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற அறிவுரைகள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும், ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் (மீராகுமார், ராம்நாத் கோவிந்த்) அங்கு எழுதி ஒட்டப்பட்டுள்ளன. அந்த அறிவுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வாக்குப்பதிவு நடக்கும் இடத்துக்குள் செல்போன், கேமரா எடுத்துச் செல்லக்கூடாது. அடையாள அட்டையை கொண்டு செல்லவேண்டும். வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரால் வழங்கப்படும் பேனாவினால் மட்டுமே வாக்குச்சீட்டில் தங்களுடைய விருப்ப வரிசைக் குறியீட்டைச் செய்யவேண்டும்.

வேட்பாளருக்கு முன்னுரிமை குறியீடு மூலம் வாக்குப்பதிவு செய்துவிட்டு, அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு தங்களுக்கு வழங்கப்பட்ட பேனாவை அதை வழங்கியவரிடம் திரும்பக் கொடுக்க வேண்டும்.

வேறு பேனாவை உபயோகித்தால் உங்கள் வாக்குச்சீட்டு செல்லாததாகிவிடும். எந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களோ, அந்த வேட்பாளரின் பெயருக்கு எதிராக உள்ள விருப்ப வரிசை முறை கட்டத்தில் ஒன்று என்று எண்ணால் எழுத வேண்டும்.

டிக், பெருக்கல் குறியீட்டை பயன்படுத்தினால் அந்த வாக்குச்சீட்டு செல்லாததாகிவிடும். வாக்குச்சீட்டில் பெயரை எழுதுவதோ, கையெழுத்து போடுவதோ, வேறு சொற்களை எழுதுவதோ கூடாது.

வாக்குச்சீட்டை உருக்குலைக்கக் கூடாது. அதை கிழித்தாலோ, சேதப்படுத்தினாலோ வேறு புதிய வாக்குச்சீட்டு வழங்கப்படமாட்டாது. வாக்குச்சீட்டை வாக்குப்பதிவு இடத்தைவிட்டு வெளியே எடுத்துச் செல்லக்கூடாது.

வாக்கின் ரகசியம் வெளிப்படாமல் அனைத்து வகையிலும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அமைதியையும், கண்ணியத்தையும் காத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்ஷு பிரகாஷ் டெல்லியில் இருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்தார். அவர் மத்திய அரசின் ஊரக மேம்பாட்டுத் துறையின் கூடுதல் செயலாளராக இருக்கிறார்.

மாலை சுமார் 5 மணியளவில் தலைமைச் செயலகத்துக்கு வந்த அவர், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சட்டசபை செயலாளர் (பொறுப்பு) பூபதி, இணைச் செயலாளர் சுப்பிரமணியன் உள்பட சில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சுமார் அரை மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் ஓட்டுப்பதிவு தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை, ஓட்டுப்பதிவு நடக்கவுள்ள பகுதிக்கு சென்று அன்ஷு பிரகாஷ் பார்வையிட்டார். அவருடன் ராஜேஷ் லக்கானி, பூபதி, சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

அனைத்து முன்னேற்பாடுகளையும் பார்வையிட்ட அன்ஷு பிரகாஷ் திருப்தி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி வருமாறு:-

கேரளாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அப்துல்லா இங்கு ஓட்டளிக்கிறார். அதுபோல மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் இங்குதான் வாக்கு செலுத்துகிறார். அதன்படி பார்த்தால் தமிழக எம்.எல்.ஏ.க்கள் 233 பேரும், கேரள எம்.எல்.ஏ. ஒருவரும், எம்.பி. ஒருவரும் இங்கு ஓட்டுபோடுவார்கள்.

இதற்காக 20 பேனாக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 275 வாக்குச் சீட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடக்கும் அன்று காலை 9 மணிக்கு, ஓட்டுப்பதிவு நடக்கும் அறையில் ஓட்டுப்பெட்டி வைக்கப்படும்.

பொதுவாக ஒரு வேட்பாளருக்கு தலா 3 ஏஜெண்டுகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும். ஆனால் தற்போது வேட்பாளர்கள் தரப்பில் தலா 2 ஏஜெண்டுகள் பெயர்கள் தரப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடக்கும்போது தலா ஒரு ஏஜெண்டு மட்டுமே அனுமதிக்கப்படுவார். அவர் வெளியே போகும்போது அடுத்த ஏஜெண்டு வர அனுமதிக்கப்படுவார்.

எம்.எல்.ஏ.க்கள் செல்போன், பேனா ஆகியவற்றை கொண்டுவந்தால், அதை வைத்துச் செல்வதற்கு தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவை பார்வையாளர் அன்ஷு பிரகாஷ் பார்வையிடுவார்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment