சிவஞானம் சிறிதரனின் செயற்பாடுகள்- முருகேசு சந்திரகுமார் கண்டனம்

261 0
எந்தச் சமூகத்தினரையும் வேறுபடுத்தி நோக்கும் எவருடைய  எத்தகைய செயற்பாடுகளையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதற்கு அனுமதிக்கவும் கூடாது. என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமாா்  குறிப்பிட்டுள்ளாா்
பாராளுமன்ற உறுப்பினா் சி. சிறிதரனின் பிரதேசவாத  கருத்துக்களை கண்டித்து  விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே அவா் இதனை தெரிவித்துள்ளாா்.
விடுதலை என்ற உன்னத இலட்சியத்துக்காகவும்  அனைத்துத் தளைகளிலிருந்தும் விடுதலைபெற்ற  மகத்தான வாழ்க்கைக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மக்களிடையே சாதி, மத, பிரதேச வேறுபாடுகளைச் சில சக்திகள் அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வருகின்றன.
இது எமது ஒற்றுமையைச் சிதைத்து, விடுதலை நோக்கிய பயணத்தை நிச்சயமாகப் பலவீனப்படுத்திப் பாதிப்பையே உண்டாக்கும் தீய செயலாகும்.
அத்துடன் இந்த மாதிரியான நடவடிக்கைகள் வரலாற்று ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்புக்குட்படுத்தும் அபாயத்தைக் கொண்டவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவேதான் இத்தகைய செயற்பாடுகளை  நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன் இத்தகைய செயற்பாடுகளுக்கு எமது முழுமையான எதிர்ப்பையும் வெளிப்படுத்தி நிற்கிறோம். இத்தகைய வேறுபாடுகளைத் தங்கள் மனதிலும் செயற்பாட்டிலும் கொண்டிருக்கும் சக்திகளையும்  தனி மனிதர்களையும் கூட நாம் எதிர்க்கின்றோம்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்  மலையக  மக்களைக் குறித்து அநாவசியமான முறையில் இழிவான சொற்பதத்தைப் பயன்படுத்திப்பேசியிருக்கும் ஒரு ஒலிப் பதிவு பகிரங்க வெளியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒலிப்பதிவு  வெளிப்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களைக் கடந்து விட்ட நிலையிலும் கூட இதைக்குறித்த தன்னுடைய தவறை சிறிதரன் ஒப்புக்கொள்ளவோ அதற்காக  மன்னிப்புக் கோரவோ அதைக் குறித்து விளக்கமளிக்கவோ  இல்லை.
ஆகவே அவர் தான் சொன்னது  சரியே எனவும் குறித்த மக்கள் தொகுதியினர் தன்னுடைய பார்வையில் கீழ் நிலையிலானவர்கள் எனவுமே கருதவைத்துள்ளார். இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியானவர்  இவ்வாறு ஒரு சமூக மக்களை தரம்தாழ்த்திப் பேசுவது எந்த நிலையிலும் அனுமதிக்கக்கூடியதல்ல. இவ்வாறு ஏற்றத்தாழ்வாகச் சமூகத்தைப் பார்க்கும் ஒருவர் சமூகங்களைச் சமத்துவமாக நடத்துவார் என யாரும் எதிர்பார்க்கவும் முடியாது.
குறிப்பிடப்படும் மலையக மக்கள் இந்த நாட்டுக்கும் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்துக்கும் செய்த பங்களிப்புகள் மிக உயர்வானவையாகும். அது மட்டுமல்லஇ எமது மக்கள் சுமந்த துயரங்களையும் சந்தித்த அவலங்களையும் இரண்டு மடங்காக ஏற்றுக்கொண்டவர்களும் இவர்களே.
ஆனால்  இவற்றையெல்லாம் அவமதித்துப் புறக்கணிக்கும் வகையிலேயே சிறிதரனுடைய கூற்று அமைந்துள்ளது. சிவஞானம் சிறிதரனுடைய இந்த இழிசெயலைக் கண்டித்து வடக்குக் கிழக்கு வாழ் மலையக மக்களின் ஒன்றியம் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தது. இருந்தும்  சிறிதரனோ அவருடைய கட்சியோ அவருடைய தலைமையோ எத்தகைய  கரிசனையையும்  இதைக்குறித்து இதுவரையில் எடுக்கவில்லை.  இதுவும் கவலைக்குரியதே.
மேற்படி நிலைமைகள் அனைத்தும் மலைய மக்களை மிகுந்த துயரத்திற்கும் மிகுந்த கோபத்திற்கும் உள்ளாக்கியுள்ளன. அந்த மக்களை மட்டுமல்ல  இந்த மண்ணிலே சமத்துவத்தையும் மெய்யான சமூக விடுதலையையும் இன விடுதலையையும் விரும்புகின்றவர்களையும் ஆத்திரமூட்டியுள்ளது. எனவே இந்த மக்களின் உணர்வுகளோடு ஒன்றிணைந்து நாமும் நிற்கிறோம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சமூக நீதியையும் விடுதலையையும் விரும்புவோர் அனைவரும் இந்த நீதியற்ற செயலைக் கண்டிக்க முன்வருவதுடன் இதற்குத் தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். சமத்துவம்  சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு இந்த அநீதியை முழுமையாகக் கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுடன் என்றும் இணைந்திருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனங்களுக்கிடையே சமத்துவத்தையும் சமூக நீதியையும் பேணும் பலம்மிக்க  தமிழ்த்தேசியமே எதையும் சாத்தியப்படுத்தும். உண்மையான ஐக்கியத்தை நடைமுறை வாழ்க்கையினூடாகவும் நடைமுறைச் செயற்பாடுகளுடாகவுமே கட்டியெழுப்ப வேண்டும். வெறும் வார்த்தைகளால் அல்ல. ஆகவே பலம் மிக்க தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்துவதற்கு நாம் சமூக நீதியையும் இனச் சமத்துவத்தையும் பேணும் செயற்பாடுகளை முன்னெடுப்போம். எதிர்ப்புச் சக்திகளையும் போலிகளையும் எதித்துப் போராடுவோம். எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment