ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்

244 0

வட மாகாண முதலமைச்சர் நிதியத்தினை வழங்காவிடின், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதம செயலகத்தை முடக்கி முற்றுகைப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிராக வழக்​கு தாக்கல் செய்வோம் என்றும் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்று (13.07) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

போருக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் செய்வதற்கு அரசாங்கத்தின் அபிவிருத்திக்கான நிதிகள் எதுவும் கிடைக்கவில்லை. 2003 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது, 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேசம் முன்வந்திருந்தது.

அதன் பின்னர் 1 லட்சம் கோடி ரூபா அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த அழிவுகளை ஈடு செய்வதற்கு எந்த நிதிகளும் கிடைக்காத சூழ்நிலையில் தான் வடமாகாண சபை முதலமைச்சர் நிதியத்தினை ஸ்தாபிக்க வேண்டுமென்று எடுத்த முயற்சிகள் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக தோற்கடிக்கப்பட்டும், தடுக்கப்பட்டும், தாமதிக்கப்பட்டும் வருகின்றது.

மாகாண சபை நிதிகளைப் பயன்படுத்தாமல், புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும், உள்ளுர் மக்களிடமிருந்தும் இந்த நிதிகளைப் பெற்று மீள்குடியேற்றம், புனர்நிர்மானம் போன்ற வேலைகளைச் செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் தடுத்து வருகின்றது.

கடந்த மாதம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வோம் என முதலமைச்சரிடம் கேட்ட போது, மாதத்திற்குள் பதில் கிடைக்குமென தெரிவித்திருந்தார். ஆனால், இன்று வரை அந்தப் பதில் எதுவும் கிடைக்கவில்லை.

முதலமைச்சரின் நிதியத்திற்கான நிதிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக முதலமைச்சர் எதிர்வரும் வடமாகாண சபை அமர்வுகளில் தெரிவிக்காதவிடத்து, முதலமைச்சர் நிதியத்தை நிறுவ வேண்டுமென்று கூறுவதுடன், அவ்வாறு இல்லாவிடின், ஜனாதிபதி செயலகம் உட்பட பிரதமர் செயலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தினை மேற்கொள்வோம்.

அரசியல் தீர்வு இல்லை. புனர்வாழ்விற்கும் அரசாங்கம் வழிவகுக்கவில்லை என்றால், வாழ்வா? சாவா? என போராடிக்கொண்டிருக்கும் இனம் ஒன்றுதிரண்டு, போராட்டங்களை முன்னெடுக்கும் சந்தர்ப்பம் தற்போது எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment