வெல்லவத்தை பகுதியில் சீனப் பெண் ஒருவரிடம் இருந்து பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் சார்ஜன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கம்பஹாவில் வைத்து குறித்த சார்ஜனைக் கைதுசெய்துள்ளதாக, வெல்லவத்தை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 27ம் திகதி வெல்லவத்தையில் சீனப் பெண் ஒருவரிடம் இருந்து ஒருகோடியே 52 இலட்சம் ரூபா பணம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் கொள்ளையிடப்பட்டன.
இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடந்த 4ம் திகதி நீர்கொழும்பில் வைத்து இருவரைக் கைதுசெய்தனர்.
இதனையடுத்து, அவர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற, தகவலின் படி, சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, வெல்லவத்தை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இவர் கம்பஹா பொலிஸ் நிலையப் பகுதியில் சேவையாற்றிய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபரை கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

