11 இளைஞர்கள் கடத்தல் – கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கைது!

243 0

2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், கொழும்பு பிரதேசத்தில், இளஞைர்கள் 11 பேரை கடத்திச்சென்று, அவர்களை சட்டவிரோதமான முறையில் தடுத்துவைத்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில், இலங்கை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்தே, கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க, இன்று (12) மாலை கைதுசெய்யப்பட்டார்.

வெலிசற பகுதியில் வைத்தே அவரை கைதுசெய்ததாக தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில், ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட கடற்படை அதிகாரிகள் ஐவரும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேற்படி கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லெப்டினன்ட் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை கைதுசெய்யுமாறு, நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment