வவுனியா மக்களால் ஆர்ப்பாட்டம் (காணொளி)

459 0

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள சிறுவர் காப்பகமான அன்பகத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி 14 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இச் சம்பவத்தை தொடர்ந்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் 2015ஆம் ஆண்டு குறிப்பிட்ட அன்பகத்திலிருந்த இன்னொரு சிறுமியின் மரணம் தொடர்பான முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் அன்பகத்தின் நிர்வாகியான சாமி அம்மா என்று அழைக்கப்படும் கு.ஜெயராணி தொடர்பாக ஊடகங்களில் பிழையான செய்திகள் வெளிவருவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகத்துறையே நீதித்துறைக்கு அப்பால் அடிப்படை தெரியாது முடிவுகளை எடுப்பதற்கு உனக்கு யார் அதிகாரம் தந்தது, உண்மையான விசாரணை மூலம் உண்மைத் தன்மையை உணர்த்துங்கள், உங்கள் பேனா மை கொண்டு உண்மையை சமூகத்திற்கு உணர்த்திடுங்கள் ஆகிய பதாதைகளை தாங்கியவாறு ஊர்வலமாக சென்றனர்.

வவுனியா மன்னார் வீதியில் அமைந்திருக்கும் அன்பகத்திலிருந்து மன்னார் வீதிவழியாக ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தை வந்தடைந்து, அரசாங்க அதிபரிடம் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து மகஜரை பெற்றுக்கொண்டு கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார, அன்பகத்தில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் மாவட்ட செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர் தனியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் விசாரணையின் பின் அன்பகம் சிறுவர் இல்லம் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment