டெங்கு நுளம்பின் பெருக்கத்தை அழிப்பதற்காக பயன்படுத்தப்படும் அபேற் எனும் இரசாயனப் பொருளால் குடிநீர், வளி என்பன மாசடைவதுடன், நோய்கள் ஏற்படும் என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை மன்னார் , எமில்நகர் – பனங்கட்டு கொட்டு, ஜிம்றோன் நகர் மற்றும் ஜீவபுரம் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் அமைப்புகள் இன்று முன்னெடுத்திருந்தன.
டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் அபேற் இரசாயன பொருளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள், இரசாயனக் கலவைக்கு பதிலாக மீன்குஞ்சுகளை விடுமாறு கேட்டுக்கொண்டனர்.
இதன் போது சம்பவ இடத்திற்கு விரைந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள்,குறித்த இரசாயனக் கலவையானது உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இந்த இரசாயனக் கலவை பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் சிறுநீரக பாதிப்பு மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனினும், மிக விரைவில் இரசாயனக் கலவை பாவிப்பதை நிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அமைப்பினர் மகஜரொன்றை அதிகாரிகளிடம் கையளித்ததுடன், மிக விரைவில் தீர்வு கிடைக்காவிடின் மீண்டுமொரு எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

