கேப்பாப்புலவு மக்களைச் சந்தித்தார் வடக்கு முதலமைச்சர்!

562 0

முல்லைத்தீவு மாவட்டம், கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கேப்பாப்புலவு இராணுவ முகாமுக்கு முன்னால் 138 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு இதுவரை எந்தவொரு தீர்வும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் அங்கு முதலமைச்சர், வடமாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் எனப் பலரும் கலந்துகொண்டவேளையில் மக்கள் மாவட்டச் செயலகம் முன்னால்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேசமே திரும்பிப்பார், எங்கள் நிலைமையை எண்ணிப்பார், மக்கள் பிரதிநிதிகளே எங்கள் வாழ்வின் உரிமையின் முடிவு என்ன, கேப்பாபுலவு பூர்வீக மக்கள் நடுத்தெரு நாய்களா? போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இம்மக்களைச் சந்தித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெகு விரைவில் இதற்கான தீர்வினைப் பெற்றுத் தருவதாக அம்மக்களுக்கு உறுதியளித்தார்.

Leave a comment