உப உணவு உற்பத்தி நிலையம் திறப்பு விழா

253 0

கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஓர் அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்திலே கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உளவனூர் கிராம மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் மேம்பாட்டிற்காக உப உணவு உற்பத்தி நிலையம் ஒன்று ரூபா 5 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டு சங்கத்தினரிடம் வைபவ ரீதியாக கடந்த 04.07.2017 அன்று கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா. டெனீஸ்வரன் அவர்களுடன் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ஜே. ஜே. பெலிஷியன் அவர்களும், கிராம அபிவிருத்தி திணைக்கள மாவட்ட அதிகாரி, கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர், கிராம சேவையாளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அமைச்சர் அங்கு குறிப்பிடுகையில் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகத்தினரின் செயற்பாடுகளை பாராட்டியதுடன் குறித்த உற்பத்தி நிலையத்தின் ஊடாக நாளாந்த வருவாயை ஈட்டுவதற்கான வழிமுறைகளை இனம் காண வேண்டியதுடன் அவற்றை அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். உற்பத்திகளை மேற்கொள்ளும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் சந்தை வாய்ப்பு, எனவே இந்த உற்பத்தி பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு இந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள் இளைஞ்சர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த நிலையமானது உப உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற நிலையம் என்பதனால் சுகாதாரம் மிகவும் அவசியமாக கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுரித்தினார். சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும். எனவே கிராமத்தின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு அனைவரும் ஒன்றுபட்டு மேற்படி உற்பத்தி நிலையத்தை நடாத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார்.

Leave a comment