யுத்தம் மற்றும் இன வன்செயல்களால் சேதமடைந்த மதஸ்தளங்ளுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படுகின்ற நஷ்டஈட்டு வேலைத்திட்டத்துக்கு அமைவாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏறாவூர் புலிதலாராமய விகாரைக்கு 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக 4 இலட்சம் ரூபா நஷ்டஈட்டு தொகைக்கான காசோலை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஏறாவூர் புலிதலாராமய விகாராதிபதி அமன்வல தர்மரத்ன தேரரிடம் நேற்று (08) கையளிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி காரியாலயத்தில் வைத்து மேற்படி நிதி கையளிக்கப்பட்டது.
இதன்போது, மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
யுத்த காலப் பகுதியில் பெருமளவு பாதிக்கப்பட்ட ஏறாவூர் புலிதலாராமய விகாரை மிகவும் மோசமான நிலையில் இயங்கி வந்தது. இந்நிலையில், இது குறித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்துக்கு ஏறாவூர் புலிதலாராமய விகாராதிபதி அமன்வல தர்மரத்ன தேரர் கொண்டு சென்றிருந்தார்.
இதனை அடுத்து விகாரைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த இராஜாங்க அமைச்சர், தனது அமைச்சினால் யுத்தம் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மதஸ்தளங்களுக்கு வழங்கப்படுகின்ற நஷ்டஈட்டு தொகையைப் பெற்றுக்கொடுக்கவும் முன்வந்தார். அதற்கமைய குறித்த விகாரைக்கு 10 இலட்சம் ரூபா நஷ்டஈட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த நிதி மூன்று கட்டங்களாக வழங்கி வைக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக 4 இலட்சம் ரூபா தற்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

