டெல்லியில் இருந்து நேரடி விமான சேவை: ஏர் இந்தியாவின் முதல் விமானம் வாஷிங்டனில் தரையிறங்கியது

201 0

டெல்லியில் இருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா இன்று தொடங்கியது. முதல் விமானத்தில் இந்திய தூதர் மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் பயணம் செய்தனர்.

இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், நேவார்க், சிகாகோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. டெல்லியில் இருந்து அமெரிக்க தலைநகரான வாஷிங்டனுக்கு நேரடி விமான சேவையை தொடங்கி உள்ளது.

இதன் தொடக்க விழா டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமெரிக்க தூதரக அதிகாரி கார்ல்சன், ஏர் இந்தியா சேர்மன் அஷ்வனி லோகனி, வர்த்தக இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் 238 இருக்கை கொண்ட போயிங் விமானம், வாஷிங்டனில் உள்ள டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த விமானத்தில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா, ஏர் இந்தியா சேர்மன் அஷ்வனி லோகனி, வர்த்தக இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா மற்றும் பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த நேரடி விமானம் வாரத்தில் மூன்று நாட்கள் (புதன், வெள்ளி, ஞாயிறு) இயக்கப்படுகிறது. இதேபோல் வாஷிங்டனில் இருந்தும் மூன்று நாட்கள் இயக்கப்படுகிறது.இந்த விமானத்தில் முதல் வகுப்பில் 8 இருக்கைகளும், பிசினஸ் வகுப்பில் 35 இருக்கைகளும், எகனாமி வகுப்பில் 195 இருக்கைகளும் உள்ளன. வாஷிங்டன் நகரைத் தொடர்ந்து அமெரிக்காவின் பிற நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ், ஹூஸ்டன் போன்ற நகரங்களுக்கும் விமானங்களை இயக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.

Leave a comment