தீவிரவாதிகள் கைது எதிரொலி: பெல்ஜியத்தில் மீண்டும் தாக்குதலுக்கு வாய்ப்பு

382 0

தீவிரவாத ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு வருவதால் பெல்ஜியத்தில் மீண்டும் புதிய தாக்குதல்கள் நடக்கக்கூடும் என அரசு வக்கீல் அலுவலகம் அச்சம் வெளியிட்டு உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் அடிக்கடி பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. எனவே பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதன் பயனாக ஐ.எஸ். ஆதரவாளரான செயித் சவோட்டி என்பவரின் 2 சகோதரர்கள் உள்பட 5 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இதில் சவோட்டியின் சகோதரர்கள் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி செய்தது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு பயங்கரவாத ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு வருவதால், நாட்டில் மீண்டும் புதிய தாக்குதல்கள் நடக்கக்கூடும் என அரசு வக்கீல் அலுவலகம் அச்சம் வெளியிட்டு உள்ளது.

இது குறித்து அந்த அலுவலக செய்தி தொடர்பாளர் எரிக் வான் டெர் சிப்ட் கூறுகையில், ‘பயங்கரவாதம் தொடர்பான சந்தேக நபர்களை நாங்கள் இன்னும் தேடி வருகிறோம். இதனால் தாங்கள் சுற்றி வளைக்கப்படுவதாக அவர்கள் உணரலாம். எனவே கடந்த ஆண்டு நடத்தியது போன்ற விளைவுகளில் அவர்கள் ஈடுபடலாம்’ என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அவர்கள் மறைத்து வைத்திருந்த ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றியதை தொடர்ந்து, பிரஸ்சல்சில் கடந்த மார்ச் 22-ந் தேதி பயங்கரவாதிகள் இரட்டை தாக்குதலை அரங்கேற்றினர். இதில் 32 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment