சிக்கிம் எல்லைப் பகுதியில் ராணுவத்தை விலக்குமாறு சீனாவின் கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்து விட்டது. இதனால் இந்தியா – சீன எல்லையில் பதற்றம் அதிகரித்தபடி உள்ளது.
சிக்கிம் மாநில எல்லையில் ‘டோங்லாங்’ பகுதி உள்ளது. இதன் பெரும் பகுதி இந்தியா வசம் உள்ளது. சிறிய பகுதி சீனாவிலும் உள்ளது. ஆனால் இது தங்களுக்கே சொந்தம் என சீனா கூறி வருகிறது.
அங்கு சாலை அமைப்பதை இந்தியா தடுத்து நிறுத்தியது. இதனால் எல்லையில் இரு நாடுகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இந்தியா – சீனா ஆகிய நாடுகள் ராணுவத்தை குவித்து வைத்துள்ளன.
இதனால் அங்கு போர் பதட்டம் நிலவுகிறது. பதட்டத்தை குறைக்க இந்தியா தனது ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என சீனா வலியுறுத்தியது.அதை ஏற்க இந்தியா மறுத்து விட்டது.
இந்த நிலையில் இந்தியாவுக்கான சீன தூதர் லுவோ ஜாவோகி நேற்று செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.அப்போது, இந்தியா – சீனா இடையேயான சிக்கிம் எல்லை பிரச்சனை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது.
அதில் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கோ, சமரசத்துக்கோ இடமில்லை. இப்பிரச் சினைக்கு தீர்வு காண்பது இந்தியாவின் கையில் தான் உள்ளது. எந்த வழிமுறையை கையாள்வது என்று இந்தியா தான முடிவெடுக்க வேண்டும்.சீனாவை பொறுத்தவரை அப்பிரச்சினை சுமூகமாக முடிய வேண்டும் என கருதுகிறது. அதற்கு இந்தியா சிக்கிம் எல்லையில் குவித்துள்ள தனது ராணுவத்தை திரும்ப பெற வேண்டும்.
மேலும் இது சீனா – பூடான் இடையேயான எல்லை பிரச்சினை. இதில் தலையிட இந்தியாவுக்கு உரிமை இல்லை. பூடான் சார்பில் அந்த பகுதியை சொந்தம் கொண்டாட முடியாது. தங்களது நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி தலையிடுவதாக கூறி எல்லை கடந்து சீனாவுக்குள் இந்திய ராணுவம் நுழைவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

