வியட்நாமில் சுற்றுச்சூழல் மாசுப்படுவதை கட்டுப்படுத்தும் விதமாக, 2030-ம் ஆண்டிற்குள் மோட்டார் சைக்கிள்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு தலைநகர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வியட்நாம் தலைநகர் ஹனோய் 10 பெருநகர மாவட்டங்கள் மற்றும் 19 புறநகர் மாவட்டங்களை கொண்டது. இங்கு 75 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
ஆனால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 5 லட்சம் கார்கள் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசலுடன் சுற்றுச்சூழல் மாசுப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே அதற்கு முடிவு கட்டும் வகையில் ஹனோய் நகர நிர்வாகம் அதிரடி முடிவை மேற்கொண்டுள்ளது.
அதன்படி வருகிற 2030-ம் ஆண்டுக்குள் ஹனோய் நகரில் மோட்டார் சைக்கிள்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து ஆலோசிக்க கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. அதில் 96 பேரில் 95 பேர் ஒப்புதல் அளித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் தடை குறித்த தகவல் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் போக்குவரத்து நெரிசல், எதிர்காலத்தில் காற்று மாசுபடுவதை தடுக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரம் பொது போக்குவரத்து சேவைகளை மேம்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

