ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு பிறகும் பழைய விலைக்கு பொருட்களை விற்றால் நடவடிக்கை

252 0

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்பட்ட விலை மாற்றம் பற்றி பொருட்களில் தனி ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்றும், பழைய விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி பல பொருட்களுக்கு கிடையாது. பல பொருட்களுக்கு ஏற்கனவே இருந்த வரிகளை நீக்கி விட்டு புதிதாக ஜி.எஸ்.டி. வரியை விதித்துள்ளனர். அதில் ஒன்றிரண்டு பொருட்கள் மீது ஓரிரு சதவீதம் வரி குறைவாகவே விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜி.எஸ்.டி. என்ற பெயரில் தண்ணீர் முதல் தங்கம் வரை எது வாங்க சென்றாலும் விலை உயர்ந்து விட்டது என்ற பதில்தான் வருகிறது.

மத்திய அரசின் கவனத்துக்கும் இந்த வி‌ஷயம் சென்றதையடுத்து மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.ஜூலை 1-ந்தேதிக்கு முன்னரே கையிருப்பில் இருக்கும் பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் ஏற்பட்ட புதுவிலையை ஸ்டிக்கராக ஒட்ட வேண்டும்.

ஏற்கனவே அச்சிடப்பட்டிருக்கும் பழைய விலை மீது எழுதவோ அல்லது ஸ்டிக்கர் ஒட்டவோ கூடாது. புதிய விலையை தனி ஸ்டிக்க ராக ஒட்ட வேண்டும். அப்படியானால்தான் பொதுமக்களுக்கு விலை மாற்றம் தெரியவரும்.பொருட்களின் விலை உயர்வதாக இருந்தால் தயாரிப்பாளர் அல்லது இறக்குமதியாளர் அதுபற்றிய விபரத்தை விளம்பரப்படுத்த வேண்டும்.

கையிருப்பில் இருக்கும் பொருட்களை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் விற்பனை செய்து கொள்ளலாம். அதன் பிறகு சந்தைக்கு வரும் பொருட்களில் விலை விபரம் பற்றி அச்சிடப்பட்டிருக்க வேண்டும். ஸ்டிக்கரில் விலை விபரத்தை ஒட்டக்கூடாது.தற்போது மார்க்கெட்டில் இருக்கும் ஏற்கனவே பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களுக்கான சில்லரை விற்பனை விலையை செப்டம்பர் 30 வரை மாற்றி அமைத்து கொள்ளலாம்.

அந்த பொருளில் அச்சிடப்பட்டிருக்கும் உண்மையான விலையில் இருந்து மாற்றியமைத்து ஸ்டிக்கர் ஒட்டிய விலைதான் மாற்றப்பட்ட விலை. அந்த விலைக்குதான் விற்க வேண்டும். பழைய விலைக்கே விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.ஜி.எஸ்.டி.யால் விளைந்த விலை குறைப்பு பலன் நுகர்வோருக்கு செல்வதை தடுத்தால் அந்த நிறுவனத்தின் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு பிறகு பழைய விலைக்கு பொருட்களை விற்பவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுப்பதற்காக மத்திய அரசு சார்பில் மாவட்ட வாரியாக உயர் அதிகாரிகள் கொண்ட “நோடல்” குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

Leave a comment