ஸ்வைப்மெஷினில் பணம் செலுத்த கமி‌ஷன் வாங்கினால் நடவடிக்கை

210 0

ஸ்வைப்மெஷினில் பணம் செலுத்த கமி‌ஷன் வாங்கும் கடைகள் பற்றி புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பணமில்லா பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவிக்கிறது.

இதற்காக பல செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வியாபார நிறுவனங்களில் கார்டு மூலம் பணம் செலுத்த வசதியாக ஸ்வைப் மெஷின்களை வங்கிகள் வழங்கி உள்ளன. ஆரம்பத்தில் ஏராளமானோர் இதில் ஆர்வம் காட்டினார்கள்.

இப்போது மீண்டும் பலர் ரொக்க பரிவர்த்தனைக்கு மாறி வருகிறார்கள். இதற்கு காரணம் கடைகளில் கார்டு மூலம் பணம் செலுத்தினால் அதற்கு கமி‌ஷன் வசூலிப்பதுதான்.

இந்த பரிவர்த்தனைக்கு வியாபாரிகளிடம் வங்கிகள் ஒன்று முதல் 2 சதவீதம் வரை கமி‌ஷன் வாங்குகிறது. இதை வியாபாரிகள்தான் கட்ட வேண்டும்.

ஏனெனில் கடைக்காரர் ஒருவர் தினசரி விற்பனையாகும் பணம் உடனுக்குடன் வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது. விற்பனையாகும் பணத்தை கையில் வைத்துக் கொண்டு வங்கியில் செலுத்த சென்றால் ஏற்படும் கால விரயம், செலவுகள் மிச்சப்படுகிறது. இந்த சேவைகளுக்காகத்தான் அந்த 2 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.

ஒரு வாடிக்கையாளர் ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் ரூ.20-ஐ அவருக்காக கடைக்காரர் செலவு செய்வதில் தப்பில்லை.

வாடிக்கையாளர்களுக்கு செய்யும் சேவையாக சில கடைகளில் இந்த கமி‌ஷனை வாங்குவதில்லை. ஆனால் பல கடைகளில் கமி‌ஷனை கட்டாயமாக வாங்கி விடுகிறார்கள். இது தவறு.

உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கினால் ரூ.200-ஐ வாங்குகிறார்கள். ஆனால் அதிக நஷ்ட கணக்கை அல்லது அதிக வியாபார கணக்கை காட்டி அதிலும் சலுகை பெற்று விடுகிறார்கள்.

வியாபாரத்தை எளிமையாக்கல், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்தல், வாடிக்கையாளர்களின் சுமை, சிரமத்தை குறைத்தல் ஆகியவற்றுக்காக அரசு இதை ஊக்குவிக்கிறது. ஆனால் வியாபாரிகள் அதையும் சாதகமாக்கி பணம் பார்க்கும் தகவல் வங்கிகளின் கவனத்துக்கு சென்றுள்ளது.

அவ்வாறு கமி‌ஷனையும் சேர்த்து வாங்கும் கடைகள் பற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a comment