தமிழ்நாட்டில் இன்று தியேட்டர்கள் 3-வது நாளாக மூடப்பட்டன: ரூ.60 கோடி இழப்பு

254 0

தமிழ்நாட்டில் இன்று 3-வது நாளாக தியேட்டர் மூடப்பட்டுள்ளதால் ரூ.60 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள 1000 தியேட்டர்கள் கடந்த 1-ந்தேதி மூடப்பட்டன. தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும். பிராந்திய மொழி படங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று திரை உலகினர் வற்புறுத்தி வருகிறார்கள்.

30 சதவீத கேளிக்கை வரியை தமிழக அரசு நீக்கினால் தான் தியேட்டர்களை திறப்போம் என்று சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி துறை, நிதி அமைச்சர்களிடம் திரை உலகினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. நல்ல தீர்வு கிடைக்கும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டது. எனவே விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என்று திரை உலகை சேர்ந்தவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இன்று காலை வரை தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரை உலகினர் கேளிக்கை வரிக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. எனவே இன்றும் தியேட்டர்கள் 3-வது நாளாக முடப்பட்டுள்ளன.நேற்று அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தான் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி. வரியை எதிர்க்கவில்லை என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அரசின் அறிவிப்பை பொறுத்தே தியேட்டர்கள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தியேட்டர் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

தியேட்டர்கள் மூடப்பட்டதால் தமிழ்நாட்டில் தினமும் ரூ.15 முதல் ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. எனவே 3-வது நாளாக தியேட்டர் மூடப்பட்டுள்ளதால் ரூ.60 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் திரைக்கு வந்த 10 புதிய படங்கள் சில நாட்கள் ஓடிய நிலையில் தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்த பட தயாரிப்பாளர்கள் தியேட்டர் ஸ்டிரைக்கை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். வரி குறைப்பு தொடர்பாக புதிய அறிவிப்புகள் எதுவும் இதுவரை வரவில்லை. எனவே சினிமா துறையினர் தவிப்புடன் காத்திருக்கிறார்கள்.

Leave a comment