தலைமைகளின் பிளவு தமிழரின் ஆணையை தோற்கடிக்கும்!

349 0
யுத்தமும் முரண்பாடுகளும் கொடியவை. அத்துடன் யுத்தத்திற்குப் பிந்தையை அமைதியும் இணக்கமும்கூட கொடியவைதான். 2002இல் மாபெரும் வெற்றிகளைக் குவித்த விடுதலைப் புலிகள் இயக்கம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்தது. போருக்குப் பிந்தைய அமைதிக் காலத்தில், அதாவது இரண்டு வருடங்களுக்குள்ளேயே ரணில் – சந்திரிக்கா அரசால், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்த கருணா பிரிக்கப்பட்டார். அப்படியானதொரு காலத்தைத்தான் தமிழ் மக்கள் இன்று சந்திக்கிறார்கள் போலவே இருக்கிறது.

ஈழத் தமிழ் மக்களின் சுய உரிமைக்காகவும், சுய  கௌரவத்திற்காகவும் விடுதலைப் புலிகள் இயக்கம், ஆசா பாசங்களைத் துறந்து, இளமையை தியாகம் செய்து போராடினார்கள். அப்படியொரு மண்ணில் இன்று நுட்பமான முரண்பாடுகளும் நுட்பமான சுயநலன்களும் கொண்ட அரசியல் சூழ்நிலை காணப்படுவதுதான் இத்தனை இழப்புக்களுக்கு முகம் கொடுத்த மக்களுக்கு வேதனையை தரக் கூடியது. நுட்பமான சூழ்ச்சிகளும் மக்களின்உணர்வுகளுக்கு எதிரான செயல்களும் ஊடுருவியுள்ளன. வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களில் நிகழ்ந்து முடிந்த மற்றும் தொடரும் நிகழ்வுகளை தமிழ் மக்கள் மிகுந்த வேதனையுடனே பார்க்கின்றனர்.
நீ சம்பந்தன் பக்கமா? விக்கினேஸ்வரன் பக்கமா? என்றொரு கேள்வியும் குழப்பமும் உரிமைக்காக போராடும் எங்களுக்கு ஏற்பட்டமை மிகத் துரதிஸ்டமானது. தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர், சசிகலா ஆதரவா? பன்னீர் ஆதரவா என்ற நிலையொன்று உருவானது. அதற்கு ஒப்பான இந்த நிலை ஈழத் தமிழ் மக்களின் போராட்ட வாழ்வை மிகவும் பாதிக்கத்தக்கது. மிகவும் தீவிரமான சிங்கள இனவாதிகளுடன் கைகோர்த்தபடி இன ஒற்றுமையுடன் வாழ்வோம் என்று சொல்பவர்கள் தமது இனத்திற்குள் ஒற்றுமையாக இருக்க இயலாமல் சக பிரதிநிதிகளைப் பழிவாங்குவது மிகவும் சூழ்ச்சிகரமானது.
சில மாதங்களின் முன்னர் மூத்த ஊடவியலாளர் நடராஜா குருபரன் இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவுத்தை ஒரு நேர்காணல் செய்தார். அதன்போது தமிழ் தேசிய அரசியல் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பசீர், விக்கினேஸ்வரனின் எதிர்ப்பு அரசியலும் சம்பந்தரின் இணக்க அரசியலும் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தும் என்று ஒரு கருத்தை முன் வைத்தார். வடக்கு முதல்வரின் எதிர்ப்பு அரசியல் மிகவும் முக்கியமான ஒன்று என்பதை எவரலாறும் மறுக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த தமிழ் மக்கள் சிங்கள அரசுடன் இணக்க அரசியல் மேற்கொள்வதை ஒருபோதும் விரும்பவில்லை. வடக்கு முதல்வரின் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கும் நியாயங்கள் மற்றும் அதில் உள்ள உறுதி தமிழ் தேசிய அரசியல் வழி வந்ததே.
வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன், முதல்வராக பதவி ஏற்றபோது, மகிந்த ராஜபக்சவின் முன்னால் சத்தியப் பிரமாணம் மேற்கொண்டதை பலரும் எதிர்த்தோம். பின் நாட்களில் அவர் தனது நிலைப்பாடுகளில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். யாழ் பிராந்தியப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அந்த மாற்றம் குறித்து விக்கினேஸ்வரன் கருத்துத் தெரிவித்திருந்தார். வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த காலத்தில் மக்களின் மனநிலைகள் உணர்வுகளை  அறிந்தபோதே தான் எப்படி நடக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டதாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

பின் நாட்களின் தமிழ் மக்களின் சுய உரிமை தமிழர் தாயக கோட்பாடு சார்ந்து வலுவாக குரல் எழுப்பினார். “பெரும்பான்மையினர் மரமாகவும் சிறுபான்மையினர் கொடியாகவும் வாழ்வதே தேசிய ஒருமைப்பாடு என்பது சிலர் எண்ணுகின்றனர். ஆனால் வடக்கு, கிழக்கு மக்கள் அதனை ஏற்கவில்லை. குறித்த பகுதியில் அவர்கள் பெரும்பான்மையாகவே வாழ்ந்தனர். இரு மரங்கள் அருகருகே இருப்பதைப் போலவே வாழ அவர்கள் விரும்புகின்றனர்.” என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். வடக்கு மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட இனப்புடு கொலை பற்றிய தீர்மானமும் அதனை ஒட்டிய முதல்வரின் விசேட உரையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

யாழ்ப்பாணத்திற்கு ஒருமுறை விஜயம் மேற்கொண்ட இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு முதல்வருடன் பேசாமல் தனது விஜயத்தை முடித்துக்கொண்டார். அத்துடன் வடக்கு முதல்வருடன் முரண்படும் கருத்துக்களையும் அவர் வெளியிட்டார். வடக்கு மாகாண சபைக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும் வடக்கு மாகாணத்தில் அது சுருங்கிப் போயிருந்தாலும் மக்களின் மனங்களால் இந்த நாட்டில் இரண்டு அரசுகளே உள்ளன. வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கு மாகாண சபையும் தெற்கின் வெளிப்பாடு இலங்கை அரசும் உள்ளன. விக்கினேஸ்வரன் – ரணில் முரண்பாடு இரு இனங்களுக்கு இடையிலான முரண்பாடு என்றே சித்திரிக்கப்பட்டன.
இதன் காரணமாகவே, இலங்கைத் தீவில் மாத்திரமின்றி உலக அளவில் வடக்கு மாகாண சபையில் இடம்பெறும் நிகழ்வுகள், உறுப்பினர்கள், முதல்வரின் நிலைப்பாடுகள் என்பன கவனத்தை ஈர்த்தன. இலங்கை அரசை சந்திக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வடக்கு முதல்வரையும் சந்திக்கத் தவறுவதில்லை. கிழக்கு மாகாணத்திற்கு ஒருமுறை சென்றிருந்தபோது வடக்கு முதல்வரைக் குறித்தும் அவரது செயற்பாடுகள் குறித்தும் அவர்கள் ஈடுபாட்டுடன் பேசுவதையும் நம்பிக்கை கொண்டிருப்பதையும் பார்த்தேன். கிழக்கு மாகாண சபையின் ஆட்சி குறித்து அவர்களின் எந்தப் பிரக்ஞையும் இருக்கவில்லை.
வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயக மண்ணின், மக்களின் வெளிப்பாடு இதுவே. இதுவே இலங்கை அரசுக்கும் பிரச்சினையாக இருக்கிறது. இனப்படுகொலைக்கான நீதி, வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் மண்ணில் சுயாட்சி என்பன தமிழ் மக்களின் கோரிக்கையாக வடக்கு மாகாண சபையால் முன் வைக்கப்பட்டது. அதுவும் ஏகமனதாக முன்வைக்கப்பட்டது. இதே விடயங்களை வலியுறுத்தியே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டது. எனவே இந்த விடயங்களை இலங்கை அரசை நோக்கியும் உலகத்தை நோக்கியும் வலியுறுத்துவது தவிர்க்க இயலாதது.
வடக்கு மாகாண சபையின் குரலை உடைக்கவும் முதல்வர் விக்கினேஸ்வரனை அகற்றவும், இனப்படுகொலைக்கான நீதி மற்றும் சுயாட்சிக் கோரிக்கையை பலவீனப்படுத்தவும் தமிழர்களின் கவனத்தை வடக்கு மாகாண சபைக்குள் குறுக்கவும் சிங்கள அரசு திட்டமிட்டு சூழ்ச்சிகளை முன்னெடுக்கிறதா என்ற சந்தேகமே இப்போது அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. தமிழ் தலைமைகளை துண்டு துண்டாக்கி அவைகளின் குரலை வலுவிழக்கச் செய்து தமிழ் மக்களை மீண்டுமொரு தோல்விக்குள் தள்ளவே இலங்கை அரசு முற்படுகிறது.  தமிழ் தலைமைகள் பிளவடைந்து தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை தோல்வியடைச் செய்யக்கூடாது. ஒற்றுமையுடன் செயற்பட்டு, தமிழ் மக்களுக்கான நீதியையும் உரிமையையும் வெல்ல வேண்டும்.
  தீபச்செல்வன்

Leave a comment