பாகிஸ்தானில் காஷ்மீர் இயக்கத்துக்கு தடை

218 0

பாகிஸ்தானில் காஷ்மீர் இயக்கம், திடீரென தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பு நாளை கூடி, முக்கிய ஆலோசனை நடத்துகிறது.

இந்தியாவின் பொருளாதார தலைநகர் என்ற சிறப்புக்குரிய மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக நுழைந்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிபயங்கர தாக்குதல்களை நடத்தி, 166 பேரை கொன்று குவித்தனர்.

பாகிஸ்தானில் இருந்து கொண்டு, இந்த மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டு நடத்திக்காட்டியவர், ஹபீஸ் சயீத் ஆவார்.  இவர்தான், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை நிறுவியவர். தற்போது இவர் ஜமாத் உத் தவா என்ற பெயரில் ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறார்.

இந்த இயக்கத்தின் புதிய அங்கமாக செயல்பட்டு வருவதுதான், ‘தெஹ்ரீக் இ ஆசாதி ஜம்மு-காஷ்மீர்’ ஆகும். இது காஷ்மீர் பிரிவினையை அடிப்படையாக கொண்டு செயல்படும் அமைப்பாகும்.

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி காஷ்மீர் தினம் கொண்டாடப்பட்டபோது இந்த தெஹ்ரீக் இ ஆசாதி ஜம்மு-காஷ்மீர் அமைப்பு, பாகிஸ்தான் முழுவதும் பேரணிகளை நடத்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஹபீஸ் சயீத், லாகூரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சில தினங்களில் இந்த காஷ்மீர் தினம் கொண்டாடப்பட்டது நினைவுகூரத்தக்கது. ஜமாத் உத் தவாவின் மறுபதிப்பாகவே தெஹ்ரீக் இ ஆசாதி ஜம்மு-காஷ்மீர் இயக்கம் பார்க்கப்படுகிறது.

இந்த இயக்கத்தை தடை செய்து பாகிஸ்தானில் உள்ள நவாஸ் ஷெரீப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கு சர்வதேச நிர்ப்பந்தம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஸ்பெயினில் உள்ள எப்.ஏ.டி.எப். என்று அழைக்கப்படுகிற நிதி நடவடிக்கை பணிக்குழு, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், பாகிஸ்தானை தனது கண்காணிப்பு வளைத்தின்கீழ் வைத்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பல்வேறு பயங்கரவாத இயக்கங் கள் மீதும் பாரபட்சமற்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.இந்த நிலையில்தான் தற்போது ‘தெஹ்ரீக் இ ஆசாதி ஜம்மு-காஷ்மீர்’ இயக்கத்தின்மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது ஜமாத் உத் தவா அமைப்புக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. தெஹ்ரீக் இ ஆசாதி ஜம்மு-காஷ்மீர் இயக்கத்தை தடை செய்திருப்பது குறித்து ஜமாத் உத் தவா அமைப்பு நாளை (திங்கட்கிழமை) கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக பாகிஸ்தான் ஊடக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த வாரம் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தலைவன் சலாவுதீனை அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதி என பிரகடனம் செய்த நிலையில், இப்போது ஹபீஸ் சயீத்தின் அமைப்பு மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a comment