பேச்சைக் குறைத்து செயலில் இறங்குங்கள்: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பேச்சு

7953 0

அ.தி.மு.க.வினர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சகிப்புத்தன்மையோடு கட்சிப் பணியாற்ற வேண்டும் என்றும் பேச்சைக் குறைத்துக் கொண்டு செயலில் இறங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா இன்று முதல் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் வரை தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களிலும் விழா கொண்டாடப்பட உள்ளது.

அதன்படி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா மதுரையில் இன்று நடந்தது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

புரட்சித் தலைவரின் நூற்றாண்டு விழாவை மதுரையில் தொடங்குவது என்பது மிகவும் பொருத்தமானதாகும். கும்பகோணத்தில் தொடக்கக்கல்வியை தொடங்கிய எம்.ஜி.ஆர். அவர்கள் குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை தொடர முடியாமல் ஏழாவது வயதிலேயே மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் வேலைக்கு  சேர்ந்தார். எனவே, அவருடைய வாழ்க்கை மதுரையோடு தொடர்புடையதாக அமைந்தது.

அதனால்தான் அவர் திரைவானில் ஒளிவீசிக் கொண்டிருந்தபோது மதுரை வீரன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் நடித்தார். 1985 பிப்ரவரி 12ஆம் நாள் எம்.ஜி.ஆர். மறுபிறவி எடுத்து அமெரிக்காவில் இருந்து மீண்டும் இந்தியா திரும்பினார். அவர் சாதாரணமாக திரும்பவில்லை, அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபடியே மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, முதலமைச்சர் நிலையில் மீண்டும் தமிழ் மண்ணில் கால் வைத்தார். எனவே, மதுரை மாவட்டம் அரசியலில் புரட்சித்தலைவரை மறு அவதாரம் எடுக்கக் காரணமாக இருந்தது.

புரட்சித் தலைவரின் நூற்றாண்டு விழாவை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என்று அம்மா அவர்கள் திட்டமிட்டு இருந்தார்களோ, அதில் சிறிதளவு கூட குறைவு இல்லாமல் நாங்கள் தமிழ்நாடு முழுவதும் இந்த விழாவை கொண்டாட முடிவு செய்திருக்கிறோம்.

மதுரையில் தொடங்கி சென்னையில் நிறைவடைவது போல் திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புரட்சித் தலைவர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்று ஆட்சி நடத்திய 10 ஆண்டுகளில் மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். டாக்டர் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் பற்றி ஐ.நா.சபையில் 158 நாடுகளின் மத்தியில் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் பேசினார்கள். பன்னாட்டுத் தலைவர்கள் வியந்து சபையில் கரகோஷம் எழுப்பி பாராட்டினார்கள்.

அதற்கு முன்பு வரை பிரதமர்களின் பெயர்களும், வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பெயர்களும்தான் ஐ.நா. சபை பதிவேட்டில் இடம் பெற்றிருந்தது. சத்துணவுத் திட்டத்தின் மூலமாக முதன்முதலில் புரட்சித் தலைவர் அவர்களின் பெயர் ஐ.நா. சபை ஏட்டில் பதிவானது.

புரட்சித் தலைவருக்குப் பிறகு கழகத்தை ஒரு தாயைப்போல கட்டிக் காப்பாற்ற, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எத்தனை இன்னல்களையும், அவமானங்களையும் சந்தித்தார் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். புரட்சித் தலைவர் அவர்களும், புரட்சித் தலைவி அவர்களும் சொன்ன அறிவுரைகளை எல்லாம் மந்திரங்களாக மனத்திலே இருத்தி ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சகிப்புத்தன்மையோடு கழகத்தில் பணியாற்ற இந்த இனிய நேரத்திலே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். இன்றிலிருந்து பேச்சைக் குறைத்துக் கொண்டு செயலில் இறங்குங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment