விக்னேஸ்வரனை முன்னிறுத்திய அரங்கும் பலாபலன்களும்!

687 0

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான முறுகல், நிரந்தரப் பிரிவுகள் சிலவற்றுக்கும், புதிய கூட்டுக்கள் (இணைவுகள்) சிலவற்றுக்கும் அச்சாரமாக அமையும் என்று சில தரப்புக்கள் நம்பிக்கையோடு காத்திருந்தன. ஆனால், இரா.சம்பந்தனின் தலையீட்டை அடுத்து விடயங்கள் விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. விக்னேஸ்வரனை முன்வைத்து புதிய கூட்டுக்களுக்கான நம்பிக்கையோடு காத்திருந்தவர்கள், ஏமாற்றத்தின் வழியில் நின்று புலம்பல்களை ஆரம்பித்திருக்கின்றார்கள். இன்னும் சிலரோ தங்களது கதவுகளைப் மீண்டும் பூட்டிக்கொண்டு அமைதியாகிவிட்டார்கள்.

‘தேசியத்தலைவர்(?)’ என்று விக்னேஸ்வரனை நோக்கி விளித்தவர்களின் நிலைமைதான் இன்னும் மோசமானது. தற்துணிவையோ, முடிவுகளின் மீதான உறுதிப்பாட்டையோ கடந்த காலங்களில் வெளிப்படுத்தியிராத ஒருவரை நோக்கி, தலைமை ஏற்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பு என்பது வறட்சிக் காலத்தில் வீண் விரயம் செய்யப்படுகின்ற நீருக்கு ஒப்பானது. அது பொறுப்பின்மையின் போக்கு. தமிழ்த் தேசியப் பரப்பில் கடந்த நாட்களில் அரங்கேற்ற எத்தணிக்கப்பட்டதும் அப்படியானதொரு காட்சியே. எனினும், சம்பந்தனே இன்னமும் தன்னுடைய தலைவர் என்று விக்னேஸ்வரன் அடங்கிக் கொண்ட நிலையில், இடைநடுவில் எல்லாமும் முடிந்து போனது.

ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர் தமிழ்த் தேசியப் போராட்டம் என்கிற தொடரோட்டத்தின் (அஞ்சலோட்டம்) ‘கைத்தடி (Race Baton)’ விக்னேஸ்வரனிடம் இருப்பதாக சிரேஷ்ட ஆய்வாளர் ஒருவர் கூறுகின்றார். தமிழரசுக் கட்சிக்கும் விக்னேஸ்வரனுக்குமான முறுகல் உச்சத்தில் இருந்த நாட்களிலும் தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்து கொண்டு அவர் அதனை மீண்டும் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது ஒரு குறுகிய இலக்கைக் கொண்ட தனியோட்டமோ, தனிநபர் ஓட்டமோ அல்ல. அது, தீர்க்கமான இலக்குகள் பலவற்றைக் கொண்ட தொடரோட்டம். இங்கு தனிநபர்களைத் தாண்டிய கூட்டுணர்வும் பொறுப்புமே அந்த ஓட்டத்தின் இலக்குக்களை சரியாக அடைவதற்கான ஏதுகைகளைச் செய்யும். அப்படிப்பார்க்கின்ற போது, தற்போது விக்னேஸ்வரனிடம் இருக்கின்ற ‘கைத்தடி (Race Baton)’ உண்மையில் ஓடிக்கொண்டிருக்கின்ற ஒருவரின் கையிலா இருக்கின்றது என்கிற கேள்வி எழுகின்றது. அவர், வயதளவில் மாத்திரமல்ல, தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகளின் போக்கிலும் தளர்ந்துதான் போயிருக்கின்றார். அவரால் நீண்ட தூரம் நடக்கவே முடியவில்லை. அப்படியிருக்க, அவரைக் கொண்டு தொடரோட்டத்தின் பெரும் பகுதியை ஓடிக் கடக்க முடியும் என்பது எவ்வளவு அபத்தமான நம்பிக்கை.

தொடரோட்டத்தின் ‘கைத்தடியை (Race Baton)’ ஒருவரிடம் வலிந்து திணிக்கும் முயற்சிகளையே தமிழ்த் தேசியத் தளத்தில் புத்திஜீவிகளும், ஆய்வாளர்களும், செயற்பாட்டாளர்களும், சில அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கின்றன. இன்றுள்ள மிகக்குறுகிய ஜனநாயக(!) இடைவெளியை வெற்றிகரமாகக் கையாள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பினை கொண்டிருப்பவர்களை அது ஏமாற்றத்தின் பக்கம் தள்ளுகின்றது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தற்போது நிகழ்ந்து கொண்டிருப்பது, குறுகிய ஆரவாரங்கள் மட்டுமே. அந்த ஆரவாரங்கள் சிலவேளை புல்லரிப்புக்களை ஏற்படுத்தலாம். எனினும், ஆக்கபூர்வமான கட்டங்களை அடைவதற்கான வழிகளைத் திறக்காது. இன்னொரு வடிவில் சொல்வதானால், இயலாமையை மூடி மறைக்க உதவலாம்.

விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட தருணத்தில், அவருக்கு ஆதரவாக இருந்தவர்களில் எம்.கே.சிவாஜிலிங்கம் முக்கியமானவர். அவர் இந்தப் பத்தியாளரிடம் கூறினார். “…முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய அரசியல் பயணத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவித சிந்தனையையும் கொண்டிருக்கவில்லை. அவர் தமிழ் மக்கள் பேரவைக்குள் இருக்கின்றார் அவ்வளவுதான். ஆனால், பேரவையை மையமாகக் கொண்டு புதிய கட்சியையோ, கூட்டணியையே ஏற்படுத்த அவர் தயாராக இல்லை. அதனை அவர் ஏற்கனவே கூறியுமிருக்கின்றார். அவர், எஞ்சியுள்ள 15 மாதங்களை பிரச்சினைகள் இன்றி கடக்கத்தான் நினைக்கின்றார். அதன்பின்னர், அவர் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார்…” என்று.

அரசியல் தீர்வுத் திட்ட யோசனைகளை வரைவதற்காக தமிழ் மக்கள் பேரவை அமைத்த குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார், “…முதலமைச்சர் விக்னேஸ்வரனை முன்வைத்துக் கொண்டு, பேரவைக்காரர்கள் ஓடி ஒழியப்பார்க்கிறார்கள். அவர்களால் உண்மையில் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்க முடியும். ஆனால், அதற்கான தைரியமும் ஆர்வமும் நேரமும் இல்லை. இரண்டு ‘எழுக தமிழ்’ பேரணிகளும் பேரவைக்குள் உள்ள அரசியல் கட்சிகளினால்தான் சாத்தியமானது. அவர்கள் இல்லையென்றால் ஒன்றும் நடந்திராது. இப்போது பாருங்கள், முதமைச்சருக்கு எதிராக காய்களை நகர்த்தி எம்.ஏ.சுமந்திரன் பெரிய வாய்ப்பொன்றை வழங்கினார். ஆனால், இறுதியில் என்ன நடந்தது? கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடும், சுரேஷ் பிரேமச்சந்திரனோடும் சேர்ந்து ‘தலைவா வா’ என்று கத்தியதோடு எல்லாம் முடிந்துவிட்டது. இந்த விடயங்கள் தொடர்பில் ஊடகங்களில் முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்களுக்கும் பெரும் அதிருப்தி உண்டு. ஆனால், கூட்டமைப்புக்கு எதிராக ஒரு தரப்பு இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக பொறுமை காத்து பேரவையைக் காப்பாற்றுகிறார்கள்…” என்று.

சிவாஜிலிங்கமும், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பேரவைக்காரரும் சொல்லியுள்ள விடயங்கள் தமிழ்த் தேசியப் பரப்பிற்குப் புதுமையானவையா? என்று பார்த்தால் ‘இல்லை’ என்பதே பதில். தெட்டத் தெளிவான உண்மையொன்றை பொய்யினால் மூடி மறைத்துக் கொண்டு நகர எத்தணிப்பது தோல்வியை வலிந்து பெற்றுக்கொள்வதற்கு நிகரானது. அதனை ஏன் தொடர்ந்து செய்ய வேண்டும்?

தமிழ்த் தேசிய அரசியல் பெரும் உணர்ச்சிகரமான கட்டங்களை 1970களில் இருந்து கண்டிருக்கின்றது. அதுதான், ஆயுதப் போராட்டங்களுக்கான விதைகளையும் தூவியது. ஆனால், கடந்த 45 வருட அனுபவத்தில் உணர்ச்சிகரமான கட்டங்கள் மாத்திரம் அரசியலின் அடுத்த கட்டத்தை கடப்பதற்குப் போதுமானதாக என்கிற கேள்வியை யாரும் எழுப்புவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், முதலமைச்சருக்கு ஆதரவாக இளைஞர்கள் வீதியில் இறங்கியதும், அதிலிருந்து ஏதாவது பலனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முனைந்த தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட தரப்புக்கள், அதனை எவ்வாறு செய்வது என்று தெரியாமல் கோட்டை விட்டன.

முதலமைச்சருக்காக அன்றைக்கு வீதிக்கு வந்த இளைஞர்கள் சில நாட்களுக்குள்ளேயே சலிப்பின் உச்சத்துக்குச் சென்று விட்டார்கள். இன்றைக்கு ஏமாற்றத்தின் உச்சத்திலிருந்து அரற்றுகின்றார்கள். இனி முதலமைச்சரை நம்பி வீதிக்கு இறங்கவே மாட்டோம் என்கிற உரையாடல்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக இடம்பெறுகின்றன. புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்களைக் கொண்ட பேரவை போன்றதொரு அமைப்பு, நம்பிக்கையான கட்டங்களை ஏற்படுத்தாது விட்டாலும் பரவாயில்லை, இளைஞர்களிடம் இருக்கின்ற நம்பிக்கைகளை சிதைக்காமல் இருக்க வேண்டும். அதுவும், தனது முடிவுகளின் மீதே எந்தவித பற்றுறுதியும் அற்ற விக்னேஸ்வரன் போன்ற ஒருவரை முன்வைத்து நம்பிக்கையை கட்டியெழுப்பி, இளைஞர்களின் மனோதிடத்தினை குலைக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியல் என்பது இளைஞர்களின் மனோதிடத்தினால்தான், அடுத்த கட்டங்களை கண்டு வந்திருக்கின்றது.

உண்மையில் பேரவைக்கும் விக்னேஸ்வரனுக்குமான தொடர்பு அல்லது ஊடாட்டம் என்பதே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. பேரவைக்குள் இருக்கின்ற தரப்புக்களோடு அவர் தனிப்பட்ட உரையாடல்களைச் செய்ததே இல்லை என்கிற குற்றச்சாட்டு பேரவைக்குள் இருக்கின்றவர்களாலேயே வைக்கப்படுகின்றன. அதிகபட்சம் அவர், இணைத்தலைவர்களில் ஒருவரான மருத்துவர் லக்ஷ்மனோடு மாத்திரமே உரையாடுகின்றார். அவரின் மூலமே பேரவையின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்கின்றார். நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றார். மற்றப்படி, அவர் தன்னோடு இருக்கின்ற ஒரு சிலரின் ஆலோசனைகளின் படியே அதிகமாக நடக்கின்றார். அப்படியான நிலையில்தான், பேரவைக்குள் இருக்கின்றவர்களினாலும், எந்தவிதமான விடயங்களையும் செய்ய முடியவில்லை. மாறாக, சம்பவங்களுக்கு பிரதிபலிப்பதோடு முடிந்துக் கொள்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக தங்களை முன்னிறுத்தும் தரப்புக்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான மக்கள் ஆதரவுபெற்ற முகமொன்று தேவைப்படுகின்றது. அதற்காகத்தான் விக்னேஸ்வரனைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது தமிழரசுக் கட்சிக்காரர்களின் குற்றச்சாட்டுக்களிலும் ஒன்று. பேரவை ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் சற்று பதற்றமடைந்த தமிழரசுக் கட்சி, இப்போது எந்தவித பதற்றமும் இன்றி நடந்து கொள்ளத் தொடங்கிவிட்டது. விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைப்பும் அதன் கட்டங்களில் ஒன்று. விக்னேஸ்வரன், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட வாய்ப்பில்லை என்பதை தமிழ் மக்களிடம் ஆழமாகப் பதிய வைத்ததில், நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பங்கு முக்கியமானது. அது, அவர்களின் அண்மைய வெற்றி. அதனை, ஏற்படுத்திக் கொடுத்ததில் பேரவையின் பங்கும் இருக்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியலில் சுமார் அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து வரும், “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்கிற தந்தை செல்வாவின் கூற்றினை விக்னேஸ்வரனும் அண்மையில் ஒப்புவித்திருக்கின்றார். நேரடி அரசியலுக்கு வந்து மூன்றரை ஆண்டுகளுக்குள் அவர் இதனை சொல்லியிருப்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது. தந்தை செல்வாவின் கூற்று அனைத்துத் தமிழ் மக்களுக்கும் அத்துப்படி. அதனைச் சொல்வதற்காக ஒருவர் ‘பராசூட்’ மூலம் இறங்கி வர வேண்டியதில்லை. அப்படிப்பட்ட ஒருவரை மாற்றத்தின் புதிய தலைமையாக கொள்ளவும் முடியாது. அதனை, விக்னேஸ்வரனை முன்னிறுத்தி அரங்கினை திறக்க முயல்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்களையும் காலம் கைவிடும்.

Leave a comment