கலவரம் செய்வதால் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது : அமைச்சர் ராஜித

301 0

பல்கலைக்கழக மாணவர்களைத் தூண்டிவிட்டு கலவரம் செய்வதன் மூலம் அரசைக் கவிழ்க்க முடியாதென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு,

“சூழ்ச்சியொன்றின் மூலமாக அரசொன்றைக் கவிழ்க்க முயன்று தோற்றுப்போன பல சம்பவங்கள் இந்நாட்டில் ஏற்கனவே நடந்துள்ளன.

ஆயுத பலத்தையும், சதிகளையும் முன்வைத்து நடத்தப்பட்ட பல போராட்டங்கள் தோல்வியடைந்துள்ளன.

மக்களின் ஆணைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்றினை அவர்களது ஆணைப்படியே வீழ்த்தமுடியுமே தவிர, சதிகளாலும், புரட்சிகளாலும், கலவரங்களாலும் அதைச் செய்யமுடியாது என்பதை இலங்கையின் வரலாறு பலமுறை தெட்டத்தெளிவாகக் காட்டியிருக்கிறது.

சுயநல அரசியல்வாதிகள் சிலர் இந்த அரசுடன் நேருக்குநேர் மோதமுடியாமல் பல்வேறு கலகங்களை உருவாக்கி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கப் பார்க்கிறார்கள்.

இன,மத,மொழி பேதங்களை முன்வைத்து அவர்கள் செய்துவரும் மறைமுக சதிகளை மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள்.

இந்த நாடு சகல இனத்தினருக்கும் சொந்தம். இங்கு எந்த இனத்துக்கும் பாரபட்சமோ பாகுபாடோ கிடையாது. அரசைக் கவிழ்ப்பதனால் தேர்தலொன்றின் மூலமே அதைச் செய்ய முடியும் என்பதை சுயநலவாதிகளும் விஷமிகளும் புரிந்து கொள்ளவேண்டும்.

அதைவிடுத்து அப்பாவி மாணவர்களைத் தூண்டிவிட்டு கலகம் செய்வதால் அவர்கள் எதிர்பார்க்கும் பலன் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை” என்று அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment