கைதிகள் தாக்கப்படுவதனை கண்டித்து நீதி அமைச்சருக்கு மகஜர்

272 0

நேற்று(28) கிளிநொச்சியில் நீதவான் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டது. 

அவர்களில் ஐந்தாம் சந்தேக நபரை அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சிறைக்காவலர்கள் தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் குறித்த வழக்கு முடிவடைந்ததும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் மன்றினை வெளிநடப்பு செய்ததுடன் நீதியமைச்சருக்கு மகஜர் ஒன்றினையும் அனுப்பியுள்ளனர்.

குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்.

மதிப்புக்குரிய தங்களுக்கு கிளிநொச்சி சட்டத்தரணிகள் தெரிவித்துக் கொள்வதாவது கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திற்குரிய கைதிகளை தடுத்து வைக்கும் சிறைச்சாலையானது வவுனியா சிறைச்சாலையிலே இயங்கி வருகின்றது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மட்டுமன்றி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முட்படுத்தப்பட்டு விசாரணையின் நிமித்தம் தடுத்து வைக்கப்படும் விளக்கமறியல் கைதிகளும் வவுனியா சிறைச்சாலையிலே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீதவான் நீதிமன்ற கைதிகள் மீதான சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் நேரடியானதும் தம்மால் நியமிக்கப்படும் நபர்களால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கல் எவ்வித காரணங்களற்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் படி ஒரு கைதி தொடர்பில் சிறைச்சாலை அத்தியகட்சருக்கு நீதிமன்றினால் கட்டளை ஒன்று பிறப்பிக்கப்படும் பட்சத்தில் குறித்த கைதியை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்.

உரிய தவணையில் மன்றில் முற்படுத்துவது சிறைச்சாலை அத்தியட்சரின் கடமையாகும். எந்தவித காரணமுமன்றி கைதிகள் தாக்கப்படுவது வன்மையாக கண்டிக்கப்படத்தக்கது.

மேலும் வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பல சம்பவங்கள் ஏற்கனவே இருக்கின்ற வேளை அண்மையில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஒரு கைதி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி விடையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இன்றயதினம் எமது அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்கின்றோம்.

01. குறித்த தாக்குதல்களை மேற்கொண்ட சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரனைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு உரிய விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

02. குறித்த குற்ற செயல்களுடன் தொடர்புடைய அலுவலர்கள் விசாரணை முடியும் வரை சாட்சிகளின் தலையீடு செய்யாத வகையில் பதவி இடை நீக்கல் செய்யப்பட வேண்டும்.

03. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும் கண்காணிப்புக்கும் உட்பட்ட பகுதியில் கிளிநொச்சி நீதிமன்ற கைதிகளுக்கு விளக்கமறியல் சிறைச்சாலை ஒன்றை அமைக்க ஆணை செய்தல் ஆகிய விடயங்கள் இவ் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment