திருகோணமலை மாவட்ட பெண்கள் அமைப்பினால் ஆர்ப்பாட்டம்(காணொளி)

647 0

மாவட்ட பெண்கள் அமைப்பின் காரியாலயம் நேற்று முன்தினம் தாக்கப்பட்டதைக் கண்டித்து, இன்றையதினம் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் அலுவலகத்திற்கு முன்பாக கண்டன பேரணியுடனான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட பெண்கள் அமைப்பின் காரியாலயத்திலிருந்து முக்கிய சில பொருட்களும், முக்கிய ஆவணங்களும் சூறையாடப்பட்டுள்ளதைக் கண்டித்து இன்றையதினம் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த கண்டன பேரணியுடனான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை அலுவலகத்தைப் பூட்டிச் சென்ற அலுவலர்கள், நேற்றையதினம் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது அலுவலகத்தினுள் இருந்த இரண்டு மடிக்கணணிகள் மற்றும் அலுவலகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் களவாடப்பட்டிருந்ததை அவதானித்து பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

இத்திருட்டுச் சம்பவத்தின்போது, அலுவலக மலசல கூடத்தின் கூரைப்பகுதி ஓடு களட்டப்பட்டிருந்ததுடன், அலுவலக மேசைக்கணணியும் இயக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அலுவலகத்திற்குள் சிகரெட் துண்டொன்றும் கிடைத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் நேரில் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மரபணு பரிசோதனைக்காக குறித்த சிகரெட் துண்டினையும் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் என்பன இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்ட நிறைவில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரிற்கு பெண்ணுரிமை செயற்பாட்டாளர்களுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கோரி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

குறித்த பேரணியில், திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் உறுப்பினர்களுடன் நாம் இலங்கைப் பெண்கள் அமைப்பினரும் இணைந்திருந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment