வடமாகாணத்தின் இரண்டு அமைச்சர்கள் விசாரணைக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை என தெரிவிப்பு

239 0
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் புதிய விசாரணைக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை என்று, வடமாகாணத்தின் இரண்டு அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
ஓய்வுப்பெற்ற நீதிபதி தியாகேந்திரன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை மாகாண அமைச்சர்களான ப.டெனீஸ்வரன் மற்றும் பி.சத்தியலிங்கம் ஆகியோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு முதல்வர் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த குழு ஒருமாதக் காலத்தில் தமது அறிக்கையை முன்வைக்கவுள்ளது.
ஆனால் இவ்வாறான குழு ஒன்றின் நியமனம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை என்று, அவர்கள் இருவரும் ஆசியன் ட்ரிபியுன் இணையத்தளத்துக்கு தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், இவ்வாறான குழுவை நியமிப்பதற்கான அதிகாரம் முதலமைச்சருக்கு 13ம் திருத்தச் சட்டத்தின் கீழும், மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் கீழும் இல்லை என்றும், மாகாணசபையின் செயற்குழுவுக்கே இந்த அதிகாரம் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சட்டவிரோதமான எந்த விசாரணைக் குழுவிலும் தாங்கள் முன்னிலையாகப்போவதில்லை என்பதை அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்தமை மற்றும் கனடாவுக்கான விஜயத்தின் போது சேகரிக்கப்பட்ட நிதி போன்ற விடயங்கள் தொடர்பில், அவர் மாகாணசபையின் செயற்குழுவில் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment