அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினை சந்திப்பதா?: தீபா

286 0

இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்ததற்கு தீபா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புரட்சித் தலைவி அம்மாவின் ஆசியோடும், ஆதரவோடும் நம்முடைய வெற்றி சின்னமான இரட்டை இலை மூலம் வெற்றி பெற்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென மு.க ஸ்டாலினை சந்திக்கிறார்கள்.இவர்களின் செயல் வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது, தற்போது மு.க.ஸ்டாலினிடம் இந்த உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை புரட்சி தலைவி அம்மாவுக்கு செய்திட்ட துரோகமாகும்.

2009-ம் ஆண்டு ஈழத்திலே லட்சக்கணக்கான தமிழர்கள் ராட்சத குண்டுகள் மூலம் கொல்லப்படுவதற்கு துணை போன காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்? தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்த போது தான் பிரபாகரனின் தாயார் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் வந்த போது தமிழ் மண்ணில் அந்த வயதான மூதாட்டியின் காலடி பட விடாமல் மனிதாபிமானமற்ற முறையில் வந்த விமானத்திலேயே திருப்பி விரட்டி அனுப்பிய வீணர் கூட்டம் தி.மு.க. என்பதை ஸ்டாலினை சந்தித்த மூன்று எம்.எல்.ஏ.கள் மறந்து விட்டார்களா?

மத்திய காங்கிரஸ் ஆட்சியில் பங்கெடுத்தும் தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த தி.மு.க. நளினி விடுதலை பற்றி சிந்தித்தது உண்டா?

பேரறிவாளன் பரோல் பற்றி நினைத்து பார்த்தது உண்டா தூக்குக்கயிற்றை முத்தமிட்டு கொண்டிருக்கும் மான மறவர்களின் உயிரை காப்பாற்ற பேரறிவாளன் துரித நடவடிக்கை எடுத்ததுண்டா? துணை முதல்வராக இருந்த மு.க ஸ்டாலின் துடி துடித்தது உண்டா?

தி.மு.க. பொதுக்குழு செயற்குழுவில் கூட ஈழ தமிழர் என்ற வார்த்தையை பயன்படுத்த நடுங்கும் தி.மு.க.விடம் மூன்று எம்.எல்.ஏக்கள் சென்றது ஈழ தமிழர்களுக்கு செய்யும் பச்சை துரோகமாகும்.

புரட்சி தலைவி அம்மாவால் உருவாக்கப்பட்ட தற்போதைய தமிழக அரசு அம்மாவின் கனவு நினைவாக உடனடியாக செய்ய வேண்டிய கடமை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் விண்ணப்ப மனுவான பரோல் முறையிட்டு விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரித்துள்ளது நிச்சயம் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல, இது புரட்சி தலைவி அம்மா ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு விரோதமானது ஆகும், இதே சட்டப்பேரவையில் பேரறிவாளான் விடுதலை செய்ய வேண்டும் என்று புரட்சி தலைவி அம்மாவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடதக்கதாகும்.

கடந்த 26 ஆண்டு காலமாக சிறையில் வாடி தவித்து வரும் ராபர்ட் பயாஸ் தன்னை கருணை கொலை செய்யும்படி அரசுக்கு வேண்டுதல் விடுத்து உள்ளார். இந்த செய்தி மனித நேயம் உள்ள அனைவரையும் கலங்க வைத்துள்ளது, தன்னை கருணை கொலை செய்யும் படி சொல்லும் அளவுக்கு அவர் மனம் நொந்து உள்ளார்.

பேரறிவாளன் உட்பட 26 ஆண்டுகளாக இதே வழக்கில் சிறையில் இருக்கும் அனைவரையும் நீண்ட கால பரோலில் விடுதலை செய்ய வேண்டும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பரோலில் விடுதலை செய்ய தமிழக அரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு ஜெ.தீபா கூறியுள்ளார்.

Leave a comment