ஈராக்கில் வான்தாக்குதல்: ஐ.எஸ். உள்ளூர் தளபதிகள் 3 பேர் பலி – 3 பாதுகாவலர்களும் உயிரிழப்பு

231 0

ஈராக்கில் வான்தாக்குதலில் சிக்கி ஐ.எஸ். அமைப்பின் உள்ளூர் தளபதிகள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பில் அவர்களது பாதுகாவலர்கள் 3 பேரும் பலியாகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் உள்நாட்டு படைகளுக்கு பக்க பலமாக அமெரிக்க கூட்டுப்படைகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் அங்கு திக்ரிஸ் ஆற்றின் கிழக்கு கரையில், மொசூல் நகருக்கு எதிரே உள்ள தால் அபார் நகரில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் தளபதிகள் பதுங்கி இருந்து, ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருப்பதாக ஈராக் ராணுவத்துக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த குறிப்பிட்ட இடத்தை குறிவைத்து போர் விமானம் ஒன்று குண்டு வீச்சு நடத்தியது.

இதில் சிக்கி ஐ.எஸ். அமைப்பின் உள்ளூர் தளபதிகள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பில் அவர்களது பாதுகாவலர்கள் 3 பேரும் பலியாகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஈராக்கில் நினிவே மாகாணத்தில் தால் அபார், மிகப்பெரிய மாவட்டம் என்பதும், இதை 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் வசப்படுத்தி விட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தால் அபார் மாவட்டத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்காக ஈராக் ராணுவம் தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a comment